இந்தியா தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்கக்கூடாது: தர்மலிங்கம் சுரேஸ்
இந்தியா தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்கக்கூடாது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நன்கு தெரியும். எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட காரியாலயத்தில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கோட்டாபய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காகத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அது முற்று முழுதாக சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலே ஒரு சில மாதங்களில் அந்த அரசியல் யாப்பை முன்வைப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் சீனாவின் வருகையையடுத்து கட்டுப்படுத்துவதற்காக இந்தியா எவ்வாறான விடையங்களைச் செய்யவேண்டும் என இந்த அரசோடு பேசி இலங்கையில் இருக்கின்ற தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் அடக்கக் கூடியவாறு பேசி செய்து தருவோம்.
எனவே நீங்கள் சீனாவின் உடைய வருகையை மட்டுப்படுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டிலே இந்த அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக 13 வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது.
இந்த நிலையில் இங்கு இருக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் தலைவர்கள் மீண்டும் அதனைப் புதுப்பிக்கும் விதமாக வந்து அந்த அரசியல் அமைப்பிலே 13வது திருத்தத்தைப் புகுத்தி அதிலே மாகாணசபை முறைமைகளை இருப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளனர்.
மேலும் தாங்கள் சொல்லித்தான் அரசு அந்த வேலைத்திட்டத்தைச் செய்கின்றது என்ற நிலைப்பாட்டைக் காட்டுவதற்காக இந்த 6 கட்சிகள் கடந்த 18-1-2022 இந்திய வெளி விவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இது ஒரு தமிழ் மக்களை மீண்டும் ஒரு சதிவலையான அழிவுக்குள் கொண்டு போவதற்கான ஒரு சாவுமணியாகத்தான் இருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் 1948 ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவருகின்றார்கள். அன்றிலிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வந்து அடக்குமுறைக்கு உட்பட்டு வருகின்றார்கள்.
அவருடைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது, இறையாண்மை கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா தன்னுடைய தேசியப் பாதுகாப்புக்காக இங்கே இருக்கின்ற தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் வெறுமனவே தங்களின் நலனுக்காக மட்டும் எங்களுடைய மக்களின் அபிலாஷைகளைத் துக்கி எறிந்துவிட்டு வெறுமனவே உப்பு சப்பு இல்லாத 13 திருத்தத்தைக் கொண்டு வருவதற்குரிய தங்களுடைய கைக்கூலிகளாக இருக்கின்ற முகவர்களை இங்கே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த 13 திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை, அது கடந்த 34 வருடங்களுக்கு மேலாக நிராகரிக்கப்பட்ட ஒன்று. அந்த அடிப்படையில் இப்போது சரியான தலைவர்களை இனங்கண்டுள்ளனர்.
6 தலைவர்களால் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பாக நேற்றைய தினம் நியாயம் கற்பிக்க 6 தலைவர்களும் இனைந்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தியுள்ளனர்.
எனவே இவர்கள் தான் இந்தியாவினுடைய கைக்கூலிகளும் அவர்களுடைய எடுபிடிகளுமாக இருக்கின்றனர். இந்தியாவுக்கும் எமக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை ஆனால் தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்கக்கூடாது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நன்கு தெரியும். எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக இந்தியாவின் செயற்பாடு இருக்கவேண்டும். எனவே இவர்கள் எங்களுடைய மக்களில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் இனைந்த வடகிழக்கு இறையாண்மை சுயநிர்ணய உரிமை அதற்கான சமஷ்டி தீர்வு தேவை எனக் கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து விட்டு இங்கே வந்து வெறுமனவே ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்ற சதி முயற்சியைச் செய்கின்ற இந்த தமிழ் தலைவர்களை மக்கள் ஓரங்கட்டவேண்டும்.
தொடர்ந்து கடந்த காலத்தில் 3 யாப்புக்கள் வந்தது இந்த மூன்று யாப்புக்களும் ஒற்றையாட்சிக்குட்பட்டவை இப்போது நான்காவதாகக் கொண்டுவரப்படும் யாப்பும் ஒற்றையாட்சிக்குட்பட்டது. எனவே இதனை இந்த இடத்திலே எதிர்க்காவிட்டால் இந்த நாட்டிலே தமிழர்கள் வாழமுடியாத ஆபத்து ஏற்படும்.
எனவே இதற்கு எதிராகத் தமிழர்கள் அனைவரும் அணிதிரளவேண்டும். நாளை 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடை பெற இருக்கின்ற அந்த போராட்டத்துக்குப் புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களின் உறவுகளுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவேண்டும்.
அதேபோன்று கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் போராட்டத்தில் வலு சேர்க்கவேண்டும். அவ்வாறே தமிழ்நாடு புலம் பெயர்ந்த மக்கள் வாழுகின்ற நாடுகள் அனைவரும் அந்த போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக