""வியத்மக"" சிங்கள சிந்தனையாளர் குழாத்தை எதிர்கொள்ளவல்ல தமிழர் சிந்தனையாளர் குழாம் வேண்டும்
சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதம் அறிஞர் கட்டமைப்பை உருவாக்குவதிலிருந்து எழுச்சி பெறத் தொடங்கியது. இத்தகைய அறிவியல் எழுச்சிக்கான தொடக்கத்தை 1880களில் இருந்து தெளிவான அடையாளம் காணலாம். இதில் அநகாரிக தர்மபால முதன்மையானவர்.
இத்தகைய அறிவியல் பாரம்பரியத்தின் உச்சமாக ராஜபக்சக்கள் "வியதமக" என்கின்ற ஓர் அறிவியல் மற்றும் நிபுணத்துவ குழாம் ஒன்றை 2015ஆம் ஆண்டின் பின் உருவாக்கி இருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தொடர்ந்து இனவாதத்தை மறுகட்டமைப்பு செய்து அதன்மூலம் தம்மைத் தக்கவைத்து தமிழ் இன அழிப்பை முழு அளவில் முன்னெடுப்பதற்காக இவ்வாறு "வியத்மக" என்கின்ற ஒரு சிந்தனையாளர் குழாத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
""எதை மாற்ற முடியுமோ அதன் மீது செயற்படு; எதை மாற்ற முடியாதோ அதனைப் புரிந்துகொள்"" என்ற தமிழ் பழமொழி இங்கு கவனத்திற்குரியது. மனிதக்குலம் தோன்றியதிலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டமும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டமும் ஓய்வின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தத் தொடர் போராட்டத்தில் மனிதன் தன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளவற்றைச் சிலவேளை வெல்கிறான். சில வேளைகளில் அதனைக் கட்டுப்படுகிறேன். சில வேளைகளில் அதனைப் புரிந்துகொண்டு புதிய பாதையைத் தேடி முன்னேற்றம் அடைகிறான். இந்த வரலாற்றறிவை ஈழத் தமிழர்களுடைய விடுதலைக்கான போராட்டத்திலும் பிரதியீடு செய்து பார்க்க வேண்டும்.
மனிதன் எங்கு விடப்பட்டு இருக்கின்றானோ அங்கிருந்துதான் அடுத்த கட்ட பயணத்தைத் தொடர வேண்டும். வெறுமனே தூய இலட்சியவாதங்களுக்கும், கனவுகளுக்கும் , கற்பனைகளுக்கும் உட்பட்டு சமூக முன்னேற்றத்தை ஒரு நொடிப் பொழுதில் உயரப் பாய்ந்து கடந்துதிட முடியாது.
முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரவலத்தின் பின்னர் கடந்த 12 ஆண்டு காலமாக ஈழத் தமிழினம் எழுந்து நிற்கமுடியாமல், தன்னை முன் நகர்த்த முடியாமல் சரிந்து கிடக்கிறது. வெள்ளத்தில் அகப்பட்ட நாணல் புற்கள்கூட வெள்ளப் பெருக்கு நீங்கியவுடன் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் எம்மால் நிமிர்ந்து இருக்க முடியவில்லை.
இதனைப் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யவும், சிந்திக்கவும் முடியாத நிலை தோன்றியிருக்கிறது. இத்தகைய மந்த நிலையைப் போக்குவதற்குத் தமிழினம் தன்னை தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது.
அந்தத் தயார்ப்படுத்தலின் போது சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவியல் ரீதியாக, கலை இலக்கிய பண்பாட்டு ரீதியாக ஈழத்தமிழ் தேசியமானது காலகட்ட சூழலுக்கும் தேவைக்கும் பொருத்தமாகத் தன்னை மீள் கட்டுமானத்துக்கு உட்படுத்த வேண்டும். அதற்கேற்ற தெளிவான சிந்தனை போக்கு இன்னும் எம்மவர் மத்தியில் வளரவில்லை.
இத்தகைய தமிழ்த்தேசிய மீள் கட்டுமானத்திற்கு உட்படாவிட்டால் தமிழினம் வளர்ச்சிக்கும், விடுதலைக்கும் தகுதியற்றதாகிவிடும். ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கப்பட்ட நிலையில் இன்னும் தொடர்ந்து ஒடுங்கிக் கிடக்கிறது.
ஆனால் ஒடுக்கிய சிங்கள பௌத்த பேரினவாதம் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தை மேன்மேலும் ஒடுக்குவதற்கும், தமிழினம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கும், மேலும் முடக்குவதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சிந்தித்துச் செயலாற்ற முற்படுகிறது.
அதன் வெளிப்பாடுதான் சிங்கள தேசியவாதம் தனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ""வியத்மக"" எனப்படும் சிந்தனையாளர், மற்றும் நிபுணர்கள் அடங்கிய சிந்தனைக் குழாம் ஒன்றை உருவாக்கி உள்ளமையாகும். அது நீண்ட தூரப் பார்வையுடன் எதிர்கால நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவல்ல செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு இங்கே ஒடுக்குவோன் தன்னை பெரியதம்பி புத்தி பூர்வமாகத் தகவமைத்துக் கொண்டிருக்கிறான். ஏனைய மதங்களையும் இனத்தவர்களையும் அடக்கி ஒடுக்கி அழித்து சிங்கள பௌத்தத்தை முன் நிலைப்படுத்துவதற்காக 1954 ஆம் ஆண்டு பௌத்த ஆணைக் குழு உருவாக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவில் சிங்கள அறிஞர்களும் கலாநிதிப் பட்டம் பெற்ற பேராசிரியர்களும் உள்ளடங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது பௌத்தத்தை அரச மதமாக்க வேண்டும் என்றும், பௌத்த சாசன அமைச்சு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், சிங்கள மொழியை அரச மொழியாக ஆக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நிர்ப்பந்தித்தது.
அதற்கமைய அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் முதன்மைப்படுத்தி சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தன்னை அறிவியல்பூர்வமாக அரசியலில் முன்னிலைப்படுத்தி ஸ்தாபிம் அடைந்துவிட்டது.
இவற்றுக்கு1953 ஆம் ஆண்டில் டி .சி விஜயவர்த்தன என்பவரால் எழுதப்பட்ட ""விகாரையில் புரட்சி"" என்ற நூல் ஆதாரமாகவும், தூண்டுதலாகவும் இருந்தது.
1962 ஆம் ஆண்டு எஸ் யூ கொடிகார எழுதிய “” Indo -- Ceylon Relations Since Independence "" என்ற நூல் தெளிவாகத் தமிழின எதிர்ப்பு வாதத்தையும் இந்திய எதிர்ப்பு வார்த்தையும் கொண்ட நூலாக அமைந்தது.
இது பிரித்தானியாவின் பல்கலைக்கழகம் ஒன்றின் கலாநிதி பட்ட ஆய்வுக்கான ஆய்வுக் கட்டுரை நூல் ஆகும். இந்நூல் சிங்கள பௌத்த அறிஞர்களும், கல்விமான்களும், பத்திரிக்கையாளர்களும், புத்திஜீவிகளும், அரசியல் வாதிகளும் தெளிவாகத் தமிழ் இன ஒடுக்கு முறையையும், இந்திய எதிர்ப்பு வாதத்தையும் முதற் கட்டமாகக் கையில் எடுத்து விட்டார்கள் என்பதையும் இனவாதம் திரட்சி பெற்றுவிட்டது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இக்காலப் பகுதியினை ""பண்டாரநாயக்கா மறுமலர்ச்சி யுகம்"" எனச் சிங்கள பௌத்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இது அறிவியல் பூர்வமாக, கலை இலக்கிய ரீதியாக, வெளியுறவுக் கொள்கை ரீதியாக, சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை அறிவியல் பூர்வமாகவும் செயல் பூர்வமாகவும் திரட்சி பெற்ற காலம் எனலாம்.
இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் தமிழர்களை முள்ளி வாய்களில் கொடூரமாக இனப்படுகொலை செய்த இனவாதிகளை உலகளாவிய மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்து அரசு கட்டில் அமர்த்தவும் அவர்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும் மேன்மேலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை இல்லாதொழிப்பதற்கான இனப்படுகொலை கலாச்சாரத்தைக் கொண்ட அறிவியல் பூர்வமான சிங்கள அறிஞர் குழு ""வியத்மக"" என்ற ஒரு கட்டமைப்பைச் சிங்கள தேசம் உருவாக்கியிருக்கிறது.
“”ஈ இருக்கும் இடங்கூட தமிழனுக்கு இல்லை”” என்ற உணர்வோடு இந்திய எதிர்ப்பு வாதத்தினூடாக தமிழர்களை இல்லாதொழிக்கின்ற இலக்கை குறிக்கோளாகக் கொண்டு சிங்கள அறிஞர் குழாம் வேகமாகச் செயற்படத் தொடங்கிவிட்டது.
இந்தப் பின்னணியில் இன்று இனவாத ராஜபக்சகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்குச் சிங்கள பேராசிரியர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், கலை இலக்கியப் படைப்பாளர்கள் என்பவர்களை உள்ளடக்கிய ""வியத்மக "" வுக்கு பக்கபலமாகச் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு (ராணுவ) பல்கலைக்கழகமும் செய்யப்படுகிறது.
பௌத்த வளர்ச்சிக்குக் கிராமப்புற பேராதனைப் பல்கலைக்கழகம் துணைநின்ற காலம் மாறி இன்று இனவழிப்புக்கும் இந்திய எதிர்ப்பு வாதத்திற்கும் முன்னுரிமை கொடுத்து நகரப்புற சேர் ஜோன் கொத்தலாவல ராணுவப் பல்கலைக்கழகம் தலைமை தாங்கி வழி நடத்தும் அடித்தளமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு ஒரு பல்கலைக்கழகத்தை இனவழிப்புக்கும், இனவாதத்திற்கும், இந்திய எதிர்ப்பு வாதத்துக்கும் தலைமை தாங்கும் ஒரு அபாயகரமான சிங்கள சிந்தனையாளர் குழாம் தோன்றி வீரியமாக வளர்ச்சி பெறுவதைக் காணமுடிகிறது. ஆனால் இவற்றுக்கு மாறாக ஒடுக்கப்பட்ட, அழிக்கப்பட்ட தமிழினம் எழுந்திருக்க முடியாமல், தன்னை மறு சீரமைக்க முடியாமல் தத்தளிக்கிறது.
தம்மை நிலைப் படுத்துவதற்கான அறிஞர் படையையோ, சிந்தனையாளர் குழத்தையோ ஈழத்தமிழர் பக்கம் காணமுடியவில்லை. அறிவியலின் பால் சிந்திக்கவல்ல ஒரு தொகுதியினர்கூட இன்னும் முன்வரவில்லை என்பதுவே வேதனையானது. தொன்மையான தமிழ்ப் பண்பாட்டு நாகரீகத்திற்கு இது அழகல்ல.
எனவே எதிரி எத்தகைய அறிவியல் முன்னேற்பாடுகளுடன் தொழிற்படுகிறான் என்பதை கற்றுக் கொண்டு அதனூடாக தமிழினம் எதிர்காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்ளக்கூடிய வீதி வரைபடத்தை வரைந்து கொள்ளவேண்டிய உடனடி அவசியம் எழுந்துள்ளது.
எனவே உடனடியாக தமிழினம் பல்துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து ஒரு பலம் பொருந்திய சிந்தனையாளர் குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
தமிழ் மக்களின் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டுமாயின், எம்மை நாம் கௌரவம் மிக்க ஒரு தேசிய இனமாகக் காட்ட வேண்டுமாயின், எங்களிடம் ஒரு சிறந்த அறிஞர் குழாம் இருக்க வேண்டியது அவசியம்.
இன்று ஒரு வளம் பொருந்திய அறிஞர் குழாம் ஒன்றை உருவாக்கிச் செயற்படுவது தமிழினத்துக்கு உடனடித் தேவையாக உள்ளது. அதனையே வரலாறு வேண்டி நிற்கிறது.
ஈழத்தமிழினத்தின் விடுதலையில் அக்கறை கொண்ட , தமிழினத்தின் எதிர்காலத்திற்கான சுபிட்சமான வாழ்வில் விருப்பு கொண்ட, நல்லுள்ளம் கொண்ட அறிஞர்களைத் தமிழ்த் தேசிய இனம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.
-திபாகரன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக