இலங்கையர் வசமுள்ள வெளிநாட்டு நாணயங்கள் அபகரிக்கப்படுமா? நீதிமன்றம் போட்ட உத்தரவு
இலங்கையர் வசமுள்ள அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை ரூபாயாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி பிறப்பித்த உத்தரவு எதிரான ரிட் மனுவை எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் உப தலைவர் அனுர மத்தேகொட ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளிலும் வெளிநாட்டு நாணயக் கணக்கைப் பேணும் சில வாடிக்கையாளர்கள், தமது கணக்கிலுள்ள டொலர்களை ரூபாயாக மாற்றுவதற்கான கோரிக்கை குறித்த வங்கிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, விண்ணப்பமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டிருப்பதாகவும் கடந்த வாரத்தில் சமூகவலைத் தளப்பக்கங்களில் பதிவுகள் வெளியாகின.
இவ்வாறான சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த ஊடகவியலாளரொருவர், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தனது வெளிநாட்டு நாணயக்கணக்கில் உள்ள அனைத்து அமெரிக்க டொலர்களும் ரூபாவாக மாற்றப்படப்போவதாக தனக்கு தனியார் வங்கியொன்றினால் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி தனது டொலர்கள் ரூபாவாக மாற்றப்படுவதை அறிந்திருப்பதுடன் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தும் வகையிலான படிவமொன்றில் கையெழுத்திடுமாறு அவ்வங்கி கோரிக்கைவிடுத்திருந்த போதிலும், தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு பல உள்நாட்டு வங்கிகள் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களின் கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றும் பணிகளை ஆரம்பித்துவிட்டதாக குறித்த வங்கி தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இவ்விடயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் உள்ள டொலர்களை வலுகட்டாயமாக ரூபாயாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கியினால் நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக்கணக்கிலுள்ள டொலர்களை வலுகட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு நாட்டிலுள்ள வங்கிகளுக்கு மத்திய வங்கி பணிப்புரை வழங்கியிருப்பதாக சிலரால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அஜித் நிவாட் கப்ரால் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும் இந்த விடயம் தொடர்பில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 20ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இலங்கை நாணய சபை ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக