பெண் போராளிகளின் காடத்த கால ஞாபகம் மறக்க முடியாத துயரத்தின் விளிம்பில்
கும்….. கும்…. கும்….. எறிகணை வீழ்ந்து வெடித்த சத்தத்தில் சாரத்திற்குள் சுருண்டு படுத்திருந்த வஞ்சி திடுக்கிட்டு எழுந்தான். கொட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளால் விரித்திருந்த உடல் மீண்டும் தன்னை சாரத்துக்குள் புகுத்தும்படி கெஞ்சியது.
காவல் கடமையி ஈடுபட்டுக்கொண்டிருந்த தோழியிடம் “நேரம் என்ன செவ்வந்தி?” என்று கேட்டாள். “நாலுமணியாகுது. நித்திரை கொண்டது காணும் பொசிசனுக்கு வாங்கோ அம்மையாரே” என்றாள் தோழி.
துள்ளியெழுந்த வஞ்சி தனது பீ.கே.எல்.எம்.ஜி யை தூக்கிக் கொண்டு, அருகிலிருந்த மரத்தினடியில் வைத்துவிட்டு, மரத்தில் சாய்ந்து நின்றபடி, எதிரியின் பிரதேசத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். அங்கே எதிரியின் காவல் அரண்களிற்கும் இவர்களின் காவலரண்களிற்கும் இடைப்பட பிரதேசத்தில் இவளது வீடு மொட்டைச் சுவருடன் அவளைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. முரசுமோட்டை என்னும் பெயருடைய அந்த அழகிய கிராமம் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தது. வாணியின் வீட்டுக்கு அவசர அவசரமாய் ஓடிவந்த மாமா “அவன் வந்திட்டான், சனமெல்லாம் ஓடுதுகள். நீங்கள் நித்திரி கொள்ளிறியள். கெதியா வெளிக்கிடுங்கோ”
கையில் அகப்பட்ட பொருட்களைத் தூக்கிக்கொண்டு அயலவர்களோடு இணைந்து கொண்டது வாணியின் குடும்பம். வீடிழந்து, சொத்திழந்து, சுகமிழந்து உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்ற துடிப்புடன் ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.
“ஐயோ…. அம்மா…. காப்பாற்றுங்கோ…. காப்பாற்றுங்கோ….” அவலக்குரல்கள் ஓங்கி ஒலித்து தேய்ந்து போயின. யார் யாரைக் காப்பாற்றுவது.
பிள்ளைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனுமாய்…. பல குடும்பங்கள் சிதைந்து போயின. இந்த அவலத்திற்குள்ளாக்கிய குடும்பங்களில் வாணியின் குடும்பங்களும் ஒன்று. வாணியின் கடைக்குட்டித் தம்பியும், அம்மாவும், அப்பாவும், இவளையும் தம்பி ரஞ்சனையும் அனாதைகளாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.
ஐந்து வயது நிரம்பிய தம்பிக்கும், பதினைந்து வயது நிரம்பிய வாணிக்கும் பாலசிங்கம் மாமாவின் வீடுதான் அடைக்கலம். கண்முன்னால் உடல்சிதறி பலியாகிய குட்டித் தம்பியும், அம்மாவும், அப்பாவும் அடிக்கடி அவள் முன்தோன்றி அவளை அழவைத்தனர். ஒன்றும் அறியா பச்சிளம் பாலகனான தம்பியும் பாசத்தைக் கொட்டி வளர்த்த அம்மாவும், அப்பாவும் நிர்க்கதியாய் அவர்களைத் தவிக்கவிட்டு சென்றது கொடுமை.
“அக்கா எங்கட அம்மாவையும், அப்பாவையும், தம்பியையும் கொன்றவர்களை நான் கொல்லுவேன் அக்கா” இது தம்பி ரஞ்சனின் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள்.
அந்தப் பிஞ்சு மனதில் ஏற்பட்ட தாக்கத்தை எண்ணியெண்ணி அவள் இளநெஞ்சம் துடிக்கும். எமது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் எந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது. ஏற்படவிடக்கூடாது. சிந்தித்த வாணி தம்பி ரஞ்சனை காந்தரூபன் அறிவுச்சோலையில் சேர்த்துவிட்டு இன்று வஞ்சியாய்……..
‘சரசர..’ என்ற சருகுச் சத்தம் அவளைக் கடந்த கால நினைவுகளிலிருந்து மீட்டுவந்தது. சத்தம் வந்த திசையை உற்றுநோக்கினாள் இராணுவத்தினர் அவளது நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஒரு கணத்தில் அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டாள்.அவளது பீ.கே இயங்கத் தொடங்கியது. சக தோழிகளது ஆயுதங்களும் சடசடக்கத் தொடங்கின. இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல். செல் மழையாய் பொழிந்துகொண்டிருந்தது.
எதிரி ஏவிய செல் அருகில் வீழ்ந்து வெடித்ததில் இவர்களது பொசிசன் நிலைகுலைந்தது. பீஸ் ஒன்று செவ்வந்தியின் வயிற்றைப் பதம் பார்த்தது. வஞ்சிக்கும் இக்கட்டான நிலை. முன்னேறிக் கொண்டிருக்கும் எதிரியைத் தாக்குவதா? வயிற்றை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் தோழியைக் காப்பாற்றுவதா?
அவள் உயிர்த்தோழி வேதனையோடு இவளைப் பார்த்த வண்ணம் மண்ணை முத்தமிட்டாள். அவளது காயத்திலிருந்து பெருகிய குருதியைக் கட்டுப் படுத்தி தோழியைக் காப்பாற்ற முடியாத இக்கட்டான நிலைக்கு உள்ளாகிவிட்டேனே. என் தோழி என் கண்முன்னாலேயே துடிதுடித்து இறந்துவிட்டாளே அவள் நெஞ்சம் வேதனையால் துவண்டது.
தனியொருத்தியாய் நின்று ஆவேசத்தோடு எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்தாள். சீறிவந்த ரவையொன்று வஞ்சியின் இதயத்தைத் துளைத்தது. பீ.கே.பட்டில் அவள் தலை சாய்ந்தது.
பக்கத்து நிலைகளிலிருந்து போராளிகள் எதிரியை வஞ்சியின் பக்கம் நெருங்கவிடாது தடுத்துத் தாக்கினார்கள். பல மணி நேரங்கள் சண்டை தொடர்ந்தது. போராளிகளின் வீராவேசத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது படையினர் இறந்த சகாக்களையும் கைவிட்டுவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
வஞ்சியின் நிலைக்கு விரைந்த தோழிகள் செவ்வந்தியையும், வஞ்சியையும் தூக்கியபோது, வஞ்சியின் பீ.கே.எல்.எம்.ஜீ ‘சடசட’ என ரவைகளைக் கக்கியது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்னவென்று பார்த்தபோது வஞ்சியின் கைவிரல் விசைவில் காப்புக்குள் இருந்தது. ‘எதிரியை அழிக்க வேண்டும் எம்மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற எண்ணமே அவளுக்கு உயிர் பிரியும் அந்தக் கணத்திலும்…….
மூலம்: தமிழறிவு.