இந்தியா ஈழப் பிரச்சனையில் தலையிட்டது போல பிரிவினைவாத விவகாரத்தில் உக்ரைனுக்குள் நுழைந்த l
இலங்கையில் ஈழத் தமிழர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா தலையிட்டதைப் போல தற்போது உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளை முன்வைத்து ரஷ்யாவும் உள்ளே நுழைந்துள்ளது.
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் தேசிய இன மக்கள். இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் சிங்கள மக்கள். இலங்கையில் தனித் தமிழ் அரசுகள் நிலை கொண்டிருந்தன. தமிழ்நாட்டு அரசுகளுடன் அரசியல் தொடர்பில் ஒரு அங்கமாகவும் ஈழம் இருந்தது.
அதேபோல் இலங்கையின் தென்பகுதியில் சிங்கள அரசுகள் இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக்கப்பட்டது. ஆங்கிலேயர் வெளியேறிய போது தென்னிலங்கை சிங்களரிடம் அதிகாரத்தை கொடுத்தனர்.
அன்று முதல் பூர்வகுடி மக்களாகிய தமிழர்கள் ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாகினர். இதன் உச்சமாகத்தான் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்த ஆயுத யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இலங்கையில் இந்தியா
1983 ஜூலை படுகொலைகளுக்குப் பின்னர் இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா தலையிட்டது. இந்தியாவுக்கு ஈழப் போராளிகள் வரவழைக்கப்பட்டு ஆயுதங்களும் ஆயுதப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.
வங்கதேச விடுதலையை பெற்றுத் தந்த பாணியில் ஈழத் தமிழர் விடுதலைக்கு வியூகம் வகுத்து செயல்பட்டார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். ஆனால் இந்திரா காந்தி 1984-ல் படுகொலை செய்யப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமரானார்.
அதன்பின்னர் 1989-ல் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து இந்தியா- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒருகட்டத்தில் ஈழத் தமிழர்கள் இந்திய ராணுவத்துக்கு எதிராக யுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையில் போய்நின்றது. அதன்பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடாமல் மேலோட்டமாக ஒதுங்கியே நிற்கிறது.
மொழி சிக்கல்
இலங்கை, ஈழத் தமிழர், இந்தியா என்கிற மூன்று பிரதான பாத்திரங்கள் அப்படியே தற்போது உக்ரைன் விவகாரத்திலும் இருக்கிறது. உக்ரைனில் உக்ரேனிய மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது.
பல பிராந்தியங்களில் ரஷ்ய மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து குடியேறியவர்கள் ரஷ்ய மொழி பேசுகின்றனர். ரஷ்யாவுடன் தொப்புள் கொடி உறவாக இருக்கின்றன. இப்படி உக்ரைனில் குடியேறியவர்கள் பெரும்பான்மையினராக சிங்களரைப் போல உருவெடுத்துவிட்டனர்.
இதனால் உக்ரேனிய, ரஷ்ய மொழி மேலாதிக்கம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. சோவியத் ஒன்றியம் உடைந்து உக்ரைன் 1991-ல் தனி சுதந்திர நாடானது முதல் இந்த மொழிச்சிக்கல் கூர்மையடைந்தது.
கிரீமியா ஆக்கிரமிப்பு
2014-ம் ஆண்டு வரை ரஷ்யா ஆதரவு அரசுகள்தான் உக்ரைனில் இருந்தது. ரஷ்யாவின் மேலாதிக்கத்துக்கு எதிரான உக்ரைனிய தேசிய இன உணர்வு தீவிரமடைந்தது. இதனால் ரஷ்யா ஆதரவு அதிபர் தூக்கியடிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது. அத்துடன் உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுகிறவர்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்தது.
ரஷ்யாவுடனான எல்லை மாகாணங்களில் ஆயுதக் குழுக்கள் கை ஓங்கும் அளவுக்கு ரஷ்யா ஆயுத உதவி செய்தது. ஒருகட்டத்தில் உக்ரைனில் இருந்து தாங்கள் தனி தேசமாக பிரிந்து விட்டதாகவும் ரஷ்யா ஆதரவு ஆயுத குழுக்கள் 2 மாகாணங்களில் பிரகடனம் செய்தன.
உக்ரைன் பிரிவினைவாதிகள்- ரஷ்யா
இதனைத் தொடர்ந்து இந்தியா இலங்கை ஒப்பந்தம் போல பிரிவினைவாதத்தை முன்வைத்து ரஷ்யாவும் உக்ரைனும் மின்ஸ்க் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன. ரஷ்ய தேசிய இனத்தின் மேலாதிக்கத்தை விரும்பாத உக்ரைன், தமது இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ சக்திகளுடன் கரம் கோர்த்தது.
இது தமக்கு பேராபத்து என அச்சப்படுகிறது ரஷ்யா. இதனால் பிரிவினைவாதிகளுக்கு அதாவது ரஷ்ய ஆயுத குழுவினருக்கு ஆதரவு என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா.
தமது தேசிய இனத்தின் உரிமையை நிலைநாட்டவும் தமது நிலத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும் வேண்டிய நெருக்கடியில் உள்ள உக்ரைனுக்கு நட்பு சக்திகளாக நேட்டோ நாடுகள் எப்படி உதவ போகின்றன? அப்படி உதவி செய்ய இறங்கினால் உலக யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிடுமா? என்ற பெருங்கவலையுடன் இருக்கிறது சர்வதேச சமூகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக