தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்வே எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டி.!
தமிழீழம் என்ற எமது தேசம் ஒளிபெறுவதற்கு உதய சூரியன் உதித்த இன்றைய நாள் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு புனிதமான நாள். பரந்து விரிந்த உலகத்தில் தமிழ் மக்களுக்கு என்று தனியான நாடொன்றை உருவாக்குவதற்காக போராடிய எமது தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த இன்றைய நாள் எமது தேசத்தின் பொன்னாள்.
சிங்கள அடக்குமுறையாளர்
களிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு பல்துறைசார்ந்த ஒரு வீரன் உதித்த இன்றைய நாள் உலகத் தமிழ் மக்களுக்கு ஒரு உன்னதமான நாள். தமிழ் மக்களின் தனித்துவ அடையாளங்களைக் கட்டிக்காக்க தரணி போற்றும் தனிப்பெரும் தலைவர் பிறந்த இன்றைய நாள் எமது மனங்களில் மறக்கப்பட முடியாத நாள்.
உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த வளர்ச்சியால் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், எந்த மாற்றங்கள் நடந்தாலும் எமது போராட்டம், எமது மாவீரர்களின் தியாகம் போன்றவற்றை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் மௌனித்த பின்னர் எல்லாமே முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்துக்கொண்ட
ிருக்கின்றனர். எமது இளைய தலைமுறையும் போராட்ட சிந்தனைகளின்றி வாழ்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் எமது வரலாறுகள் மறைக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழின விடுதலை நோக்கி பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறிவிடும்.
எனவே, அதை நாம் மாற்றியமைத்து எமது வரலாறுகளை அவ்வப்போது பிள்ளைகளுக்கு கூறவேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளை இனப்பற்றுடன் வளர்க்க முடியும். அந்த வகையில் இன்று எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63வது பிறந்த தினம். இன்றைய தினத்தில் அவரைப் பற்றிய தடங்களை மீள்பார்வைக்கு உட்படுத்தவேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். இவர்தான் அவர்களுக்கு கடைசிப் பிள்ளை. பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கல்வி கற்றார். ஆதற்கு மேல் அவரால் கல்வி கற்க முடியவில்லை. இன உணர்வு அவரது கல்விக்குத் தடை போட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்த மக்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் சிறு வயதிலிருந்தே குடிகொண்டது.
1958 ஆம் ஆண்டு சிறிலங்காவின் தென்பகுதியில் ஏற்பட்ட இனக்கலவரம் இவரது மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரபாகரனுக்கு நான்கு வயதாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழின அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் நேரடிச் சாட்சியங்களாக கேட்க நேர்ந்தது.
அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைப் பெண் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தை பிரபாகரனுடைய தாயார் பார்வதியம்மாவிற்கு கூறியபோது சிறுவனாக இருந்த பிரபாகரன் அதை அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அது அவரை கடுமையாகச் சிந்திக்கத் தூண்டியது. மேலும் மேற்படி இனக்கலவரத்தின்போது பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது மேலும் மேலும் அவர் சினமடைந்தார்.
ஆனாலும் இவையனைத்தையும் தனக்குள் அடக்கிக்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரபாகரனுக்குள் இருந்த தமிழினப் பற்றும் அதிகரித்தது. தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள இனவெறி அரசும் படைகளும் மேற்கொண்டு வந்த வன்முறைகளை நிறுத்துமாறு கோரி அப்போதைய தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் பிரபாகரன் பங்குகொண்டார். பாடசாலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் செல்கின்ற பிரபாகரன், தமிழ் மக்களுக்கான விடுதலை நோக்கி செயற்பாடுகளை மேற்கொண்டார். தனது நகர்வுகளை வீட்டுக்குத் தெரியாமல் வைத்துக்கொண்டார். சிறு வயதிலிருந்தே இரகசியங்களைப் பாதுகாக்க கற்றுக்கொண்டதால் அது அவருக்கு பின்னாளில் பெரிதும் உதவியது.
இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசு தமிழ் மாணவர்களின் கல்வியிலும் கைவைக்கத் தொடங்கியது. பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சிங்கள அரசாங்கள் கொண்டுவந்த தரப்படுத்தல் கொள்கையால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தச் செயற்பாடும் பிரபாகரனை கடும் கொதிப்படைய வைத்தது. சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக
்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது.
நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறிச் சிங்களப் படையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
10 ஆம் வகுப்புவரையிலும் படித்த அவர் அதற்கு மேலும் பொறுமை காக்காமல் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கினார். பிரபாகரனின் செயற்பாடுகள் பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் சிறீலங்கா காவல்துறை பிரபாகரனைத் தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அன்றிலிருந்து வீட்டுக்கு வரவில்லை. தன்னை முழுநேரப் போராளியாக மாற்றிக்கொண்டார். உள்ளூரில் தயாரிக்கக்கூடிய கைக்குண்டுகளைக் கொண்டு சிறீலங்காப் படையிருக்கு எதிராகச் சிறு சிறு தாக்குதல்களை நடத்தினார்.
பிரபாகரன் தனக்கு நெருக்கமான நண்பர்களை இணைத்துக்கொண்டு சிறிய குழுவாக இயங்கிய போதிலும் சிறீலங்கா அரசின் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளத் தொடங்கினர். அவரிடம் இருந்த சிறந்த தலைமைத்துவப் பண்புகளால் மேற்படி மாணவர்களையும் நண்பர்களையும் ஒருங்கு திரட்டி தனது 18 ஆவது வயதில் 1972 ஆம் ஆண்டு புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை ஆரம்பித்தார். அந்த இயக்கம் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. சிங்களப் படையினரைத் திணறடிக்கும் வகையிலான தாக்குதல்களை மேற்கொண்டது. பின்னர் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு அதன் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றப்பட்டது.
தமிழினத்தை கருவறுக்க முற்பட்ட சிறிலங்கா அரசுக்கும் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறந்த பாடம் புகட்டிக்கொண்டி
ருந்தமையால் அது இந்தியாவின் கவனத்தை ஈர்க்கப்பெற்றது.
இந்தியாவுடன் அதுவும் தமிழகத்திலிருந்த ஈழ உணர்வாளர்களுடன் பிரபாகரனுக்கு ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெறக்கூடிய நிலை ஏற்பட்டது. இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. இந்த மாறுதல்களுடன் தலைவர் பிரபாகரன் இந்தியாவால் நன்கு அறியப்பட்டார். இந்த அறிதலானது தலைவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சக்தியாக மாற்றியது. தொடர்ந்து முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன்பால் தலைவர் பிரபாகரன் ஈர்க்கப்பட்டார். இந்த ஈர்ப்பானது புலிகளின் போராட்டத்தை மேலும் பலப்படுத்தியது.
தொடர்ந்து வந்த காலங்கள் புலிகளின் காலங்களாகவே மாறின. தமிழீழ மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்ப
ட்ட அமைப்பாக புலிகள் இயக்கம் மாறியது. தலைவர் பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர் என்று ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். முன்பெல்லாம் கெரில்லாவாக மறைந்திருந்து தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் காலப்போக்கில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக மரபுவழிச் சமர்களைப் புரியக்கூடியவர்களாக மாற்றமடைந்தனர். சிறிய சிறிய ஆயுதங்களை மட்டும் வைத்திருந்து சமர் புரிந்த இவர்கள் இப்போது அதி நவீன ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளக்
கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.
தனியே சிறிலங்காப் படைகளுடன் போர் புரிவதுடன் மட்டும் நின்றுவிடாமல் தமிழ் மக்களுக்கென்று தனியான தாயகம் ஒன்றைக் கட்டி வளர்ப்பதில் பிரபாகரன் வெற்றி கண்டார். தரைப்படையுடன் கடற்படை, வான்படை என்ற முப்படைகளையும் உருவாக்கி தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். இதனை விட குறைந்த இழப்புக்களுடன் எதிரிக்கு கூடிய இழப்பை ஏற்படுத்தக்கூடிய கரும்புலிகள் படையணியை உருவாக்கினார். தனது படையணிகளில் மட்டுமன்றி நிர்வாகக் கட்டமைப்பிலும் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்தார்.
காவல்துறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, நிர்வாகத்துறை, வைப்பகங்கள், நீதிமன்றங்கள் போன்ற பல கட்டமைப்புகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசாங்கம் ஒன்றை அமைத்தார். உலக நாடுகளே வியக்கும் வண்ணம் இந்த அரசாங்கம் செயற்பட்டது. இவற்றை விட, உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாக, போரில் உயிரிழந்த வீரர்களைக் கௌரவிப்பதற்கென்றே வருடத்தில் ஒருமுறை, அதுவும் முதல் போராளி உயிரிழந்த தினத்தன்று தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை உருவாக்கினார். அதைப் புனிதமான நாளாகவும் கடைப்பிடிக்கச் செய்தார்.
உண்மையிலேயே இந்தச் செயற்பாடுகள் சாதாரண ஒரு மனிதனால் செய்ய முடியாத காரியங்கள். எத்தனை பலம் இருந்தாலும் வேற்று நாடுகளின் உதவியின்றிச் சாதாரண ஒரு மனிதனால் இத்தகைய சாதனைகளைச் செய்வது என்பது அசாத்தியமானது. ஆனால் எமது தலைவர் அதனைச் செய்து முடித்தார். எமது தலைவர் தொடர்பாக பலரும் புகழ்ந்து கூறியிருக்கின்றனர். அதில் அவரது நெருங்கிய தோழனாக விளங்கிய பழ.நெடுமாறன் ஐயா கூறும்போது, ‘நமது தமிழர்கள் அடிமைச் சேற்றில் புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த போது புலிகளாக மாற்றி உலகத்தையே பிரமிக்க வைத்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. இருபதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டங்கள் உண்டு.
இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவரான நேதாஜீ சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் சிங்கப்பூரிலே சுதந்திர இந்திய அரசை அமைத்து, இந்திய இராணுவத்தை அமைத்து, இந்திய விடுதலைக்காக போராடியமை மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.
ஆனால் உலகமறிந்த மாபெரும் தலைவர் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களுக்கு அன்று வல்லரசாக விளங்கிய ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் ஆதரவளித்தன. வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை கோசிமின் நடத்திய போது அந்த போராட்டத்திற்கு செஞ்சீனமும் சோவியத் ஒன்றியமும் எல்லாவகையிலும் துணை நின்றன. அதைப்போல பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோது யாசீர் அரபாத் அவர்கள் அதற்கு தலைமை தாங்கினாலும், இருபத்தியேழு அரேபிய நாடுகள் அவருக்குப் பக்கபலமாக நின்றன. வங்க தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்தியா முழுமையாக உதவியது.
ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டங்களிலேய
ே தனித்தன்மை வாய்ந்த போராட்டம் எதுவென்று சொன்னால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம்தான். பிரபாகரன் அவர்கள் தலைமையில் தமிழீழ போராட்டம் அன்று நடைபெற்றபோதும், இனி நடைபெறப் போகின்ற போதும் சரி அந்தப் போராட்டத்திற்கு உலகில் எந்த நாடோ, எந்த ஒரு அரசோ, ஒரு சிறு உதவி கூடச் செய்யவில்லை. மாறாக இந்தியா போன்ற அண்டை நாடுகளே அதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்தச் சூழ்நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரகாகரன் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் துணைகொண்டு அவருடைய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் மட்டுமே நம்பி இந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்.
பிரபாகரன் அவர்களை நான் முன்பு குறிப்பிட்ட உலகறிந்த தலைவர்களோடு ஒப்படும்பொழுது வயதாலும் அனுபவத்தாலும் அவர் மிக மிக இளையவர். ஆனால் நாடோ, எந்த அரசோ உதவாமல் தனி மனிதனாக பிரபாகரன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டிய கடமை எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு’ என்றார் பழ நெடுமாறன் ஐயா.பழ.நெடுமாறன் ஐயா கூறியது போன்ற இந்த வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.
தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் குறிப்பிட்டளவான இளைஞர்களுக்கு, குறிப்பாக, இன்று 17 தொடக்கம் 20 வயதிலுள்ள இளைஞர்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்று தெரியாது. அவர்களுக்கு அதை எடுத்துக் கூறவும் பெற்றோர்கள் விரும்புவதில்லை. இப்படியான செயல் எமது தமினத்தை அதல பாதாளத்திற்குள் தள்ளிவிடும். எமது போராட்டத்தை, எமது தலைவரை முற்றுமுழுதாக இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுவே, எமது தமிழீழத் தேசியத் தலைவரின் இன்றைய பிறந்த தினத்தில் விடுக்கப்படும் செய்தியாகும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக