புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.!
யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம் முழுமையும் விடுதலைப் புலிகளின் கைகளில் வந்தது. அடுத்த ஓரிரு தினங்களிலேயே சுற்றுவட்டாரத்திலும் சிங்களக் கொடுங்கோன்மையினரின் பாதச் சுவடுகள் துடைத்தெறியப்பட்டு முல்லை நகர் சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கிடையில், முல்லைத்தீவு முகாம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது, எக்காரணம் கொண்டும் அதனைக் கைவிடமாட்டோம் என, சிறீலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த சூழுரைத்து அனுப்பிவைத்த படை, பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் முல்லைப்படைத்தளத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அலம்பிலிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இறக்கப்பட்டது. ஆனாலும் நிலைமையை முன்னரேயே எடைபோட்டிருந்த விடுதலைப்புலிகள் அவர்களைச் சுற்றி வளைத்துக் குறிவைத்தனர்.
நகர முடியாத இறுக்கமான பொறியில் சிக்கிக்கொண்ட படையினர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தானர்.விடுதலைப் புலிகளோ பாதுகாப்பாக நிலை எடுத்து எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கினர். இங்கு களநிலைமை இப்படியிருக்க, குழும்பில் குளுகுளு அறையில் இருந்துகொண்டு அமைச்சர்கள் விடும் அறிக்கை வேறுவிதமாக இருந்தது. முல்லைத்தீவு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள மேலதிக படையினர் முகாமில் உள்ள படையினருடன் எந்த நேரத்திலும் இணைந்துகொள்வார்கள், முல்லைத்தீவு முகாமின் ஒரு பகுதியில் இருந்து கொண்டு படையினர் புலிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்றெல்லாம் அமைச்சர்கள் இலகுவாக செய்திகள் தந்து கொண்டிருந்தனர்.
ஆனால் களநிலைமை வரலாறு காணாத ஒரு பெரும் தோல்வியை அரசின் தோள்களில் சுமத்திக்கொண்டிருந்தது. யாழ். வெற்றி என்ற உள்ளீடற்ற பொய்மைத் தோற்றம் பொசுங்க்கிக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் மீளமுடியாத ஒரு கிடுக்குப் பிடியில் அரசு சிக்கிக்கொண்டிருந்தது. உண்மை இப்படியிருக்க பொய்மைகள் வேறு முகத்தில் ரூபவாஹினியில் தோன்றின.
உண்மையை எவ்வளவுகாலம் திரையிட்டு வைப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா…? ஆனால் மறைக்க முனைந்தார்கள். சத்ஜய இராணுவ நடவடிக்கையின் வாயிலாக. சத்ஜய இராணுவ ஆரம்பிக்கப்பட்டது யூலை இருபத்தாறில். இந்த இராணுவ நடவடிக்கை ஆணையிரவில் இருந்து கிளிநொச்சியை நோக்கி, கையறுநிலையில் சடுதியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வு என்பது இராணுவ விவகாரங்கள் புரியாதவர்களால் கூட புரிந்து கொள்ளக்கூடியதே.
முல்லைத்தீவு முகாமைக் காப்பாற்றப் போனவர்கள் காப்பாற்றுவார் இன்றி, மாழ்வதைத் தவிர மீளும் வகையறியாமல் திகைத்து நிற்க, இந்த சத்ஜய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆனையிறவில் இருந்து கெடுகாலத்தில் புறப்பட்ட இராணுவம் பரந்தனில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு இன்றி பரந்தன் வரை முன்னேறிய சிறிலங்காப் படையினர் பத்துநாட்கள் பரந்தனிலேயே தரித்து நின்று, தமது நிலைகளைப் பலப்படுத்தி, மீண்டும் அடுத்த நகர்வை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பித்தனர். முன்னர் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர்கள், போல் இது சுலபமாக இருக்கவில்லை. வான்வழியாகக் குண்டுகளைச் சொறிந்தபடி, எறிகணைகளை மழைபோல் பொழிந்தபடி, டாங்கிகள் கனரக வாகனங்கள் சகிதம் புறப்பட்ட இராணுவத்தினர் சொற்ப தூரத்தில் வைத்தே கடுமையாகத் தாக்கப்பட்டனர். உறுதியான முடிவுடன் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.
பெரும் எடுப்பிலான இந்த நகர்விற்கு விடுதலைப்புலிகள் முகம் கொடுக்காமல், குடாநாட்டில் பின்வாங்கியது போல் பின்வாங்குவார்; நகர்வு சுலபமாய் அமையும் எனத் திட்டம் வகுத்தோர் தப்புக்கணக்குப் போட்டிருக்கக் கூடும். ஐந்தாம் ஆறாம் திகதிகளில் நடந்த சண்டையில் ஆறு யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டன. நூற்றிற்கும் மேற்ப்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். இரண்டு நாள் சண்டையில் பெருமளவில் இராணுவ வளங்களை இராணுவம் இழந்தது. பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர், மீண்டும் ஒரு தோல்வியைச் சுமந்துகொண்டு பரந்தனுக்குப் பின்வாங்கியுள்ளனர்.
காலப் போருத்தமின்றித் தொடங்கப்பட்ட இந்த சத்ஜய இராணுவ நடவடிக்கையின் தேவை என்ன என்பதற்கு ஒரு காரணம் வெளிப்படையாக சொல்லப்படுகிற போதும், இதற்கு இன்னுமொரு காரணமும் காட்டப்படுகின்றது. முல்லைத்தீவைக் காப்பாற்றவென, அமைச்சர் ரத்வத்தையால் அனுப்பிவைக்கப்பட்ட படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவர்களை மீட்டெடுப்பதற்கு வழி தேடிய சிறிலங்கா பாதுகாப்பு உயர்பீடம், இந்த சத்ஜயவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருமுகப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் கவனத்தை, சிதறடித்து படையினரைக் காப்பாற்ற அரசாங்கம் திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது.
அதாவது விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் இருந்து, சிக்கிய படையினரை இழுத்தெடுக்க அரசு கையாண்ட உத்தி என சொல்லிக்கொள்கின்றார்கள். கிளிநொச்சிவரை முன்னேறுவது, முடிந்தால் தரைப் போக்குவரத்துப் பாதை ஒன்றை அமைப்பது என்ற அடிப்படையில், முன்னர் வரைந்த திட்டத்திற்கு திடீரென உயிர் கொடுத்து நகரவிட்ட அரசு, இதன் மூலம் இரு காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என நம்பியிருக்கக்கூடும். முல்லைத்தீவில் அப்பிக் கொண்ட சகதியைத் துடைப்பது, சிக்குண்ட படையினரைக் காப்பது என்ற வகையில் அது சிந்தித்திருக்கக்கூடும்.
எது எப்படி இருப்பினும், இரு களநிலையிலும் விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டியுள்ளனர். முல்லைத்தீவை சுத்தப்படுத்தி மக்களின் வளமான வாழ்க்கைக்கு பாதை திறந்த விடுதலைப் புலிகள், கிளிநொச்சி நோக்கிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பாதிக்கும் ஆப்பு வைத்தனர்.
– சுப்பு.
வெளியீடு : எரிமலை இதழ்
- சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் வீரவணக்க நாள்
- முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்
—
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக