புதிய அரசமைப்பு இலங்கையில் தமிழர்களை மேலும் பலவீனமாக்கும் - தமிழக முதல்வருக்கு சென்றது கடிதம்
இலங்கையில் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு தமிழர்களின் நிலையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.
இவ்வாறு தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் உலக தமிழர் பேரவையும் தெரிவித்துள்ளன.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் இருவரும் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர் அவர்கள் அதில் தெரிவித்தவை வருமாறு,
இலங்கையில் தமிழர்கள் மீண்டும் முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளனர். யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற நிலையில் பொருளாதார வாய்ப்புகள் மோசமாக உள்ளன, யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறுதலில் முன்னேற்றம் என்பது சிறிதளவும் இல்லை தமிழர்கள் தங்கள் இருப்பு தொடர்பில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர்-வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் மக்களின் குடிசார் எண்ணிக்கையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட அரச அனுசரணையுடனான முயற்சிகள் காரணமாக வடக்குகிழக்கு மாகாணங்களில் தங்களின் நிலத்தையும் அடையாளத்தை பாதுகாக்கவேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
இலங்கையில் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு தமிழர்களின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்ற அச்சம் காணப்படுகின்றது, இது மாகாணசபை முறையை இல்லாமல் செய்யும் அல்லது பலவீனப்படுத்தும் என்ற அச்சம் காணப்படுகின்றது- இந்தியாவின் நேரடி தலையீட்டுடன் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட ஒரேயொரு அரசமைப்பு அதிகார ஏற்பாடு மாகாணசபை இவ்வாறான மோசமான சூழ்நிலையில் நாங்கள் இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும் ஆதரவையும் வழிகாட்டுதல்களையும் எதிர்பார்க்கின்றோம்.
தமிழ்மக்கள் தங்களின் வரலாற்றுரீதியான வாழ்விடங்களில் குறிப்பிட்ட அளவு சுயாட்சியை அபிலாசையாக கொண்டுள்ளனர்-மேலும் அவர்கள் இலங்கையில் தாங்கள் சமபிரஜைகளாக வாழ்வதற்கும் தங்கள் தனித்துவமான அடையாளத்தை பாதுகாப்பதற்கும் இந்த அதிகாரமளித்தல் அவசியம் என கருதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் இந்திய சிந்தனை மற்றும் கொள்கை நிலைப்பாடுகளுடன் எப்போதும் எதிரொலிக்கும் நிலைப்பாடாக இது காணப்படுகின்றது.
இந்தியா இலங்கை மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டுள்ளது,மேலும் நீதி சமாதானம் கௌரவம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஆகியவை குறித்த தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கு தீர்வை காணுமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.
இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை ஆதரிக்கும் கொள்கையையும் தமிழர் அபிலாசைகளிற்கான அர்ப்பணிப்பையும் இந்தியா ஜெனீவா அமர்வு உட்பட பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளது.
இவை பரஸ்பரம் பிரத்தியோகமான தேர்வுகள் இல்லை. இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா வகுப்பதில் தமிழ்நாடு எப்போதும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
இந்த சூழமைவில் தமிழக முதல்வர் கடைப்பிடிக்கும் பாதை மற்றும் யதார்த்தபூர்வமான அணுகுமுறை எமக்கு மகத்தான ஆறுதலை தருகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்த பிரச்சினையில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவது தமிழ் மக்களின் நீண்டகால செழிப்பு மற்றும் அமைதிக்கு மிக முக்கியமானது. இது பாக்குநீரிணை மற்றும் இந்தியாவின் இருபுறமும் உள்ள தமிழர்களின் நலன்களுடன் உள்ளாந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக