ரஷ்ய - உக்ரைன் பிரச்சினையும் அமெரிக்காவின் ஒற்றுமை அரசியல் முன்நகர்வுகளும்
இன்று கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா-உக்ரைன் மோதல் என்பது வெறுமனே ஒரு நில ஆக்கிரமிப்புக்கான அல்லது ஒரு நாட்டை ஆக்கிரமிப்பதற்கான போர் என எழுந்த மாத்திரத்தில் பேசிட முடியாது. அது ஒரு வரலாற்று ரீதியான மனிதகுல நாகரிக வளர்ச்சியோடும், மனிதக் குழுக்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்தல் என்ற அடிப்படையில் அது ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும்.
எனவே உக்ரைன் ரஷ்யாவின் புவிசார் அரசியலில் அதனுடைய பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள பகுதி. இதுவே இந்தப் போருக்கான அடிப்படை எனவே அது பற்றி சற்று பார்ப்போம்.
இன்றைய உலகம் பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி,நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் விளைவினால் தோற்றுவிக்கப்பட்டது.
இவ் ஐரோப்பிய நாகரிக வளர்ச்சியின் பரவலின் பிரதிபலிப்பாக இன்றைய உலகம் வடிவமைத்திருக்கிறது. அதே நேரத்தில் இன்றைய உலக ஒழுங்கு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட இராணுவ, அரசியல், பொருளியல் விளைவுகளின் அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உலக ஒழுங்கு காலத்துக்கு மாற்றமடைந்து செல்வதையும் காணமுடிகிறது.
1453 ஆம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியர்கள் கொன்ஸ்தாந்ததிநோபிளை (இன்றைய இஸ்தான்புல்) கைப்பற்றியதை அடுத்து கிழக்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பியர்களிடையே ஒரு பெரும் அரசியல் அறிவியல் , அரசியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியது.
அந்த அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடு நாடுகாண் பயணங்களை மேற்கொள்ள வைத்தது. அதனால் உலகளாவிய புதிய குடியேற்றவாத நாடுகள் தோன்றின. ஐரோப்பாவில் பெரும் இராணுவ வளர்ச்சி ஏற்பட்டது. இது ஆசியக் கண்டத்திற்கும் பரவியது. இந்த பெரும் இராணுவ வளர்ச்சி பேரரசவாத ஆசையினை ஒவ்வொரு நாடுகளிலும் தோற்றுவித்தது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட பேரரசவாத அவா மனிதகுலத்துக்கு எதிரான பெரும் இனவழிப்புகளுக்கும், கொடூரமான வஞ்சக அரசியலுக்கும் வழி வகுத்தது.
இந்த வஞ்சகமான மனித தர்மத்துக்கு முரணான பேரரசுவாதம் அரசியல் கோட்பாடாகவும், அரசியல் நெறி முறையாகவும் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. இத்தகைய அரசியல் கோட்பாடுகளில் இருந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது.
இங்கே நீதிக்கும் நேர்மைக்கும் மனித தர்மத்துக்கு இடம் கிடையாது. அனைத்தும் அந்தந்த நாடுகளுடைய தேசிய அபிலாசைகளும், நலன்கள் சார்ந்தே நீதி வரையறுக்கப்படுகிறது என்பதை முதலில் மனிதகுலம் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே இன்றைய உலகில் அரசியல் நடைமுறை என்பது இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பேரழிவின் பின்னால் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த நாடுகளின் அவரவர் நலன் சார்ந்த செயல்முறையே அரசியல் நடைமுறையாக கொள்ளப்படுகிறது.
அந்த அடிப்படையில்தான் இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகம் இரண்டு அணியாக பிரிந்தன. ஒன்று முதலாளித்துவ அரசுகளும், இரண்டாவதாக சோசலிச அரசுகளும் என இரண்டு அணிகளாக பிரிந்தன.
இந்த இரண்டு அணிகளும் தமக்கிடையே அரசியல் இராணுவ பொருளியல் போட்டியில் ஈடுபட்டதை உலகம் பனிப்போர் என வரையறை செய்கிறது.
இந்தப் பணிப்போரில் மேற்கு ஐரோப்பா தழுவிய மேற்குலகம் என்பது அமெரிக்காவின் தலைமையிலும் சோசலிச அணி என்பது சோவியத் ஒன்றியம் என்ற பேரரசின் தலைமையிலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் என இரண்டு அணிகளாக இருந்தன.
1946ல் வின்ஸ்டன் சர்ச்சில் கிழக்கு ஐரோப்பாவை சோவியத் ஒன்றியத்தின் கூட்டு நாடுகளாக இருந்த போலந்து, ருமேனியா இரண்டையும் உள்ளடக்கி ஒரு இரும்புத் திரை ( Iron Curtain ) என்றார். இங்கே இந்த இரும்புத்திரை என்பது அரசியல் அர்த்தத்தில் சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு வலயமும் ரகசியம் நிறைந்த அதன் முன்னரங்கமும் என்பதனையே குறித்து நிற்கிறது.
இந்த நாடுகள் மேற்குலகிற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்திருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் இரண்டு அணிகளும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவ கூட்டுகளை அமைக்க தொடங்கின.
அந்த அடிப்படையில்தான் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டே (NATO) இராணுவ கூட்டமைப்பை உருவாக்கினர். சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் வார்சோ ( Warsaw) கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நேட்டோ (NATO) எனப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (NATO- North Atlantic Treaty Organization) 1949 -ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பு. 12 நாடுகளுடன் தொடங்கிய நேட்டோ அமைப்பு தற்போது 30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பலம் வாய்ந்த கூட்டமைப்பாக மாறியிருக்கிறது.
மேற்கு ஜெர்மனி நேட்டோவின் ஒரு பகுதியாக மாறியபின்னர் 1955ல் NATO கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் ஹங்கேரி, போலந்து, ருமேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, கிழக்கு ஜெர்மனி, அல்பேனியா (1968 வரை) வார்சோ ( Warsaw ) ஆகிய 7 நாடுகள் இணைந்து வார்சசோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வார்சோ அமைப்பு என்பது நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலுக்கு எதிர்த்துப் போரிடுவதாகும். இவ் ஒப்பந்தம் இன்நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனத்தை மதித்து நிற்கும் என்று அமைப்பு தெரிவித்தாலும் அவை சோவியத் ஒன்றியத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. 36 ஆண்டுகள் நீடித்த வார்சோ
1991 ல் பனிப்போரின் முடிவில் இவ்வமைப்பு கலைந்துவிட்டது.
சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதற்காக ஸ்டாலின் கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்குமான பிரிகோடக அவ்வமைப்பை மாற்றியமைத்தார். சோவியத் யூனியனின் பாதுகாப்பு முன்னரங்க பகுதியாக போலந்து, ஹங்கேரி, யூகோஸ்லாவியா, சொகோ ஸ்லோவேகியா, ருமேனியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இருந்தன.
எனவே பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியம் ஸ்திரத்தன்மை வாய்ந்த முதலாவது பாதுகாப்பு வலயமாக அந்நாடுகள் விளங்கின. ஆனால் 1989 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பெரஸ்ரேகா சீர்திருத்தத்தின் மூலம் சோவியத் ஒன்றியத்தின் கூட்டு நாடுகளான கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிரிந்து முதலாளித்துவ நாடுகளாக மாற்றமடைந்தன. அது மாத்திரமல்ல அதிற் பல மேற்குலகின் அணியில் இணைந்தும் விட்டன.
1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து 14 புதிய தேசிய அரசுகள் உருவாயின. இந்த 14 தேசிய அரசுகளும் சேவியத் ஒன்றியம் என்கின்ற நாட்டின் இரண்டாவது பாதுகாப்பு வளையத்துக்குள் அதாவது புவிசார் அரசியல் பாதுகாப்பு வளையம் இருந்த நாடுகளாகும்.
ஆனால் இந்த இரண்டாம் கட்ட பாதுகாப்பு வளையத்தையும் 1991ம் ஆண்டுக்குப் பின்னரான காலத்தில் ரஷ்யா படிப்படியாக இழந்ததது. ரஷ்யாவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் விளைவில் இருந்து அது தன்னை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்திய காலத்தில் மேற்குறிப்பிட்ட நாடுகளை நேட்டோ அணியில் அமெரிக்கா இணைத்துக்கொண்டுவிட்டது.
இங்கே பார்க்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான இரட்டை மைய உலக அரசியல், பனிப் போரின் பின் முடிவுக்கு வந்தது. அவ்வாறு முடிவுக்கு வந்தபோது உலகின் இரண்டு இராணுவ கூட்டமைப்புக்களில் வார்சோ இராணுவ அமைப்பு இல்லாது போயிற்று. ஆகவே எதிர்த்தரப்பு இல்லாதபோது இன்னொரு கூட்டணி எதற்கு என்ற கேள்வி எழுகின்றது.
ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் அனைத்தையும் பின் அமெரிக்கா தலைமையில் இணைப்பதற்கான காரணம் என்ன?
இவ்வாறு இணைப்பதனை அமெரிக்கா தன் மீது போர் தொடுப்பது ஆகவே ரஷ்யா கருதுகிறது. அதனை விளாடிமிர் புட்டின் ஊடகபேட்டி ஒன்றில் ""அமெரிக்கா எம்மீது நீதியற்ற போரை கொடுக்கிறது"" என்கிறார் அது உண்மையும் கூடத்தான்.
அதாவது ஒரு நாட்டுக்கு எதிராக இராணுவக்கூட்டுக்களை உருவாக்குவது, படை விஸ்தரிப்பு , போர் பயிற்சிகளில் ஈடுபடுவது, படைகுவிப்புகளில் ஈடுபடுவது என்பனவெல்லாம் ஒருவகையில் போர்தான் . அந்தப் போர் குறித்த ஒரு அரசியல் இலக்கை அடைவதற்கான ராஜந்திர வழிமுறையாக அல்லது பலப்பிரயோகமாகவே பார்க்கப்பட வேண்டும்.
நேட்டே கூட்டமைப்பு வார்சோ இல்லாதபோது கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேட்டே அணி என்பது ஆரம்பத்தில் இருந்த 12 நாடுகளிலிருந்து அது பெரு வளர்ச்சி கண்டு இன்று 30 நாடுகளை கொண்டதாகக் காணப்படுகிறது.
எனவே இங்கே எதிரணி இல்லாதபோது ஒரு புதிய பெரும் கூட்டணி உருவாகி்கப்படுவது கேள்விக்குரிய விடயம். உண்மையில் அமெரிக்கா எவ்வளவு பலவானாக உருப்பெற்றிருந்தாலும் ரஷ்யாவையும், சீனாவையும் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
ஏனெனில் ரஷ்யா ஒரு கோடியே 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ஒரு பெரும் பிரதேசமாக 15 கோடி மக்களை அது கொண்டிருக்கிறது. அவ்வாறு சீனாவில் ஏறத்தாழ 97லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் 150 கோடி மக்களையும் கொண்ட நாடு் எனவே இவற்றைக் கொண்டுதான் இந்த மேற்குலகம் அஞ்சுகின்றது.
எனவே ரஷ்யாவை சீனாவையும் ஆசியாவுக்குள் முடக்கி வைக்கவே மேற்குலகம் விரும்புகின்றன. அந்த விருப்பத்தின் வெளிப்பாடுதான் நேட்டோ அமைப்பு 30 நாடுகளை கொண்ட பெரிய அமைப்பாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.
அந்த அமைப்பில் இறுதியாக இருக்கின்ற உக்ரைனை இணைத்துவிட மேற்குலகம் விரும்புகிறது. இணைத்துவிட்டால் ரஷ்யாவுக்கான கருங்கடல் வழியாக மத்திய தரைக்கடலுக்கான கடல்வழிப் பாதை முடக்கப்பட்டுவிடும்.
இந்த நிலையில்தான் கருங்கடல் பகுதியில் உள்ள கிரீமியாவை 2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டுவிட்டது. அதன் பின்னணியில் இப்போது உக்ரைன் ரஷ்யாவின் இராணுவ மேலாதிக்கத்தில்லிருந்து தன்னைப் பாதுகாக்க நேட்டோ இராணுவக் கூட்டில் இணையவும் முற்படுகிறது.
அவ்வாறு உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டால் ரஷ்யாவுக்கான இறுதி பாதுகாப்பு வளையமும் அகற்றப்பட்டுவிடும். அதன்மூலம் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து துண்டிக்கப்படும்.
இது ரஷ்யாவின் புவிசார் அரசியலில் அதனுடைய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் மிக ஆபத்தானது. எனவேதான் தொடர்ந்தும் ரஷ்யா தனது கடல் வழிப் பாதையை தக்கவைக்கவும் மேற்குலக அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாப்பதற்கும் அது தொடர்ந்து போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.
இங்கே மறுவளத்தில் உக்ரைனியர்கள் சுதந்திரமானவர்கள், அவர்களுடைய சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதேவேளை ரஷ்யாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பதனையும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ரஷ்யாவின் இந்த படை நடவடிக்கைக்கான காரணம் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக்கூடாது என்ற நிபந்தனையை மட்டுமே முன்வைக்கிறது. அதனை ஏற்றுக் கொண்டால் இந்த யுத்தத்திற்கான தேவை ஏற்பட்டிருக்காது.
நேட்டோவில் இணையக்கூடாது என்ற வாக்குறுதியை பெறுவதற்காகத்தான் ரஷ்ய உக்ரைனின் எல்லையில் படை குவிப்பையும் , போர் முஸ்தீப்பிலும் ஈடுபட்டது. ஆனால் இந்த முஸ்தீபுக்கு உக்ரைன் எந்த எதிர்வினையையோ அரசியல் நகர்வுகளையும் மேற்கொள்ளாத பட்சத்தில் போர் முஸ்தீப்பானது மோதலுக்கான வழியைத் திறந்து விட்டிருக்கிறது.
இயல்பாகவே போர் முஸ்தீபுகள் போருக்கான வழியைத் திறந்த விடும் என்பது வரலாற்று வளர்ச்சியாகும். எனவே ரஷ்யாவின் இலக்கு அடையப்படும் வரை இந்தப் பகுதியில் மோதல் தொடர்வது தவிர்க்க முடியாததாகிறது.
உக்ரைனில் மக்கள் கொல்லப்படுகிறார்கள், மனிதகுலத்துக்கு எதிரான போர் என கூறும் மேற்குலக ஊடகங்கள் மற்றும் மேற்குலக தலைவர்கள் இந்தப் போரை நிறுத்தும்படி யாரும் இன்றுவரை கோரவில்லை. மாறாக இந்தப் போரை ஊக்குவிப்பதற்கு உக்ரைன் மக்களிடம் ஆயுதங்களை அள்ளி வழங்குகிறார்கள். போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும், ரஷ்யர்கள் கொடுங்கோன்மை வாதத்திற்குள் ஆட்பட்டுவிட்டார்கள் என்றும் , புட்டின் ஒரு கொடுங்கோலன் என்றும் மேற்குலகம் பிரச்சாரம் செய்வதற்கான காரணங்கள் என்ன?.
போரை நிறுத்த வேண்டுமானால் முதலில் போரில் ஈடுபடும் பகுதியினருக்கான ஆயுத வழங்களை நிறுத்தினாலே போர் நின்றுவிடும். எனவே இங்கே போரை நிறுத்துவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. குறிப்பாக அமெரிக்கா இந்தப் போரை விரும்புகிறது.
இந்தப் போரின் மூலம் ரசியாவை சர்வதேசத்திடம் இருந்து பிரிக்கவும், ஆசியாவுக்குள் முடக்கவும் அது விரும்புகிறது. தனக்கு சவால் விடக்கூடிய எந்த ஒரு பலவானும் இந்த பூமிப்பந்தில் இருக்கக் கூடாது என்பதனை அது விரும்புகிறது.
எனவே தன்னுடைய உலகளாவிய அந்தஸ்தை தொடர்ந்து நிலைநாட்ட மேற்குலக துணையுடன் உக்ரைன் போர் தேவையாக உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான சீனா, ரஷ்யாவை நியாயப்படுத்துகிறது. அதேநேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா நடுநிலைமை வக்கிறது.
எனவே புவிசார் அரசியலில் உலகளாவிய எந்தப் பேரரசும் தன்னுடைய பாதுகாப்பு வளையத்துக்குள் எதிரணியினர் உலாவுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இதனை அமெரிக்கா கியூபாவில் கைகொள்கின்ற கொள்கைக்கும், அவ்வாறு சீனா தாய்வான் மீது உரிமை கோருவதும், இந்து சமுத்திரத்தில் இந்தியா இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த முற்படுவதும் இந்த புவிசார் அரசியல் பாதுகாப்பு வலயம் என்கின்ற தற்காப்பு நோக்கு நிலையில் இருந்தாகும் .
எனவே இந்த உக்ரைன் விவகாரத்தில் சமாதான வழிமுறை அரசுத் தலைவர்களிரன் நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது.
புட்டினால் இந்தப் போரை நிறுத்த முடியாது . அவரால் நிறுத்தப்பட்டாலும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்க மாட்டாது. இந்த விவகாரம் ரஷ்யாவின் வாழ்வை நிர்ணயிக்கும் பிரச்சனை. எனவே ரஷ்ய மண்ணிலிருந்து இன்னும் பல புட்டின்கள் தோன்றுவார்கள்.
உக்ரைனை வழி நடத்துவது மேற்குலக கூட்டு. எனவே இந்தப் போரை மேற்குலகத்தினால் மட்டுமே நிறுத்த முடியும். இப்போது பந்து மேற்குலகத்தின் கையில் உள்ளது. உக்ரைன் மக்களின் சமாதானமும், சக வாழ்வும் மேற்குலகினால் மட்டுமே தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
இந்த யுத்தத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றால் குலைந்து செல்லும் அதன் ஒற்றைமைய உலகத் தலைமைத்துவம் மீண்டும் இஸ்தாபிதமடைய முடியும்.
தி.திபாகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக