ஹிட்லர் வீழ்த்தப்பட்டதில் ஸ்டாலின் பங்கு என்ன? அவரது சர்வாதிகார முகம் எத்தகையது?
ஜோசஃப் ஸ்டாலின்தான் நீண்டகாலம் சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிந்தவர். அவருக்கு அடுத்தபடியாக நீண்ட காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராக இருப்பவர், இப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஸ்டாலினுடைய கடுமையான அணுகுமுறையைப் போலவே, தற்போது புதினின் அணுகுமுறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப் பெரிய படையெடுப்பாகவும் இப்போது நிகழும் ரஷ்யாவின் யுக்ரேன் படையெடுப்பு கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஜோசஃப் ஸ்டாலின் குறித்த பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், அவர் எப்படிப் பட்டவர் என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது அவரைப் புரிந்துகொள்ள உதவும்.
ஸ்டாலின் என்ற பெயருக்கு "இரும்பு மனிதன்" என்று பொருள். அவர் நாஜி அபாயத்தை தோற்கடிக்க உதவிய போர் இயந்திரத்துக்குத் தலைமை வகித்தார். கால் நூற்றாண்டு காலம் சோவியத் சோஷியலிஸ்ட் ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.
அதே நேரம், அவரது ஆட்சி பல லட்சக்கணக்கான மக்களுக்கு மரணத்தையும் துன்பங்களையும் ஏற்படுத்தியது. இத்தகைய சக்தி வாய்ந்த மனிதரான அவர், ஒரு செருப்புத் தொழிலாளியின் மகனாகவும் அவரைப் பாதிரியாராகப் படிக்க அனுப்பிய ஒரு பெண்மணியின் மகனாகவும் தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.
வறுமையில் பிறந்தவர்
ஜோசஃப் ஸ்டாலின், 1879-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி, ரஷ்ய முடியரசின் கீழ் இருந்த ஜார்ஜியாவின் கோரியில் பிறந்தார். அவருக்கு முதலில் ஐயோசிஃப் (ஜோசஃப்) விஸ்ஸரியொனாவிச் ஸுகாஸ்விலி என்று பெயரிப்பட்டது.
அவர் வறுமையில் வளர்ந்தார். அவருடைய தாய் ஒரு சலவைத் தொழிலாளி. அவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் ஏழு வயதில் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டதால், இடது கை சற்று சிதைந்ததோடு, முகத்தில் தழும்புகளும் ஏற்பட்டன. அவர் மற்ற குழந்தைகளால் துன்புறுத்தப்பட்டார். மேலும் தன்னை நிரூபிக்க வேண்டிய ஒரு தொடர்ச்சியான தேவை அவருக்கு இருப்பதாகவே அவர் உணர்ந்தார். அவர் வளரும்போது, ஜார்ஜியாவின் நாட்டுப்புற காதல் கதைகள் மற்றும் ரஷ்ய எதிர்ப்பு மரபுகள் அவருடைய கற்பனைகளை பற்றின.
மதகுருமார் தொழிலுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள்
ஜோசஃபின் தாய் அவரை ஒரு பாதிரியார் ஆக்க விரும்பினார். 1895-ல் ஜார்ஜிய தலைநகரான டிஃப்லிஸில் அதற்காக அவரைப் படிக்க அனுப்பினார்.
இருப்பினும் ஜோசஃப் கிளர்ச்சி செய்து, வேதத்தைப் படிப்பதற்குப் பதிலாக கார்ல் மார்க்ஸின் எழுத்துகளைப் படித்து உள்ளூர் சோசலிசக் குழுவில் சேர்ந்தார். ரஷ்ய மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகர இயக்கத்திற்கு அவர் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார். அவருடைய தாயின் விருப்பத்திற்கு மாறாக, ஜோசஃப் ஒரு நாத்திகராக மாறி, பாதிரியார்களுடன் அடிக்கடி வாதிடுவார். 1899-ல் அவர் தனது தேர்வுகளுக்கு வரத் தவறியதால், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
புரட்சிகர கொள்ளைக்காரன்
வானிலை ஆய்வு மையத்தில் எழுத்தராகப் பணிபுரியும் போது, ஜோசஃப் தனது புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு, வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.
அவருடைய நடவடிக்கைகள் ஜாரின் ரகசிய காவல்படைக்குத்த் தெரியவரவே, அவர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷிவிக்) கட்சியில் சேர்ந்து 1905 ரஷ்ய புரட்சியில் முதல் முறையாக கொரில்லாப் போரை (போர்முறை) நடத்தினார். போல்ஷிவிக் தலைவரான லெனின் உடனான அவருடைய முதல் சந்திப்பு ஃபின்லாந்தில் நடந்த கட்சி மாநாட்டில் நிகழ்ந்தது. தலைமறைவில் இயங்கும் இந்த செயல்பாட்டாளரால் லெனின் ஈர்க்கப்பட்டார். 1907 ஆம் ஆண்டில், ஜோசஃப் 250,000 ரூபிள்களை (அமெரிக்க டாலர்களில் சுமார் $3.4 மில்லியன்) டிஃப்லிஸில் நடந்த ஒரு வங்கியைக் கொள்ளையடித்து, இயக்கத்தின் செயல்பாடுகளுக்காகக் கொடுத்து உதவினார்.
இரும்பு மனிதன்
ஜோசஃப் தனது முதல் மனைவி கிடெவான் ஸ்வானிட்ஸ் 1906-ல் திருமணம் செய்து கொண்டார். அவர் சிறிய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அதற்கு அடுத்த ஆண்டில் கிடெவான், மகன் யாகோவ் ஸுகாஸ்விலியை பெற்றெடுத்தார். டிஃப்லிஸ் வங்கிக் கொள்ளைக்குப் பிறகு ஜோசஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜாரிஸ்ட் படையிலிருந்து அசர்பைஜானில் உள்ள பாகுவுக்கு தப்பிச் சென்றனர். 1907-ஆம் ஆண்டில் கிடெவான், டைஃபஸில் இறந்தபோது, ஜோசஃப் சோகத்தில் மூழ்கினார். அவர் தனது மகனை, மனைவியின் பெற்றோர் கவனித்துக் கொள்ள விட்டுவிட்டு, தனது புரட்சிகர வேலையில் மூழ்கியதன் மூலம் தன்னை உணர்வுகளிடம் இருந்து துண்டித்துக் கொண்டார். அவர் ரஷ்ய மொழியில் 'இரும்பு' என்று பொருள்படும் 'ஸ்டாலின்' என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பல சந்தர்ப்பங்களில் அவர் கைது செய்யப்பட்டார். 1910-ஆம் ஆண்டில் கடும்பனிப் பரப்பான சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார்.
லெனினுடன் ஸ்டாலின்
ரஷ்யப் புரட்சியில் ஸ்டாலின் பங்கு
"அமைதி, நிலம் மற்றும் ரொட்டி" என்ற முழக்கங்களின் கீழ் ரஷ்யப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் லெனின். போல்ஷிவிக் பத்திரிகையான பிராவ்தாவை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் அந்தப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்தார்.
ஜார் மன்னரின் ராணுவத்திலிருந்து ஃபின்லாந்திற்கு தப்பிச் செல்ல லெனினுக்கு உதவியபோது, அவர் ஒரு கதாநாயகனாகப் போற்றப்பட்டதோடு, போல்ஷிவிக் கட்சியின் உள் வட்டத்திற்குள் நுழைந்தார். ஜார் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் நாடு உள்நாட்டுப் போரில் இறங்கியது. ஸ்டாலின், கட்சியில் உள்ள மற்ற கடும்போக்குவாதிகளைப் போலவே, தப்பியோடியவர்கள் மற்றும் துரோகிகளை பகிரங்கமாகத் தூக்கிலிட உத்தரவிட்டார். லெனின் ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார்.
சர்வாதிகாரியாக உயர்ந்த ஸ்டாலின்
1924-ஆம் ஆண்டில் லெனின் இறந்த பிறகு, ஸ்டாலின் தன்னை அவருடைய அரசியல் வாரிசாக உயர்த்திக் கொள்ளத் தொடங்கினார்.
கட்சியில் பலர் செம்படைத் தலைவர் லியோன் டிராட்ஸ்கி லெனினின் இயற்கையான வாரிசாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்டாலினின் கருத்துகள் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையினருக்கு மிகவும் லட்சியம் மிக்கதாக இருந்தது. ஸ்டாலின் உலகப் புரட்சியை விட சோவியத் யூனியனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஸ்டாலினின் கருத்துகள் கட்சியில் பிரபலமாயின. 1920-களின் பிற்பகுதியில் அவர் சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாக மாறினார்.
விரைவான தொழில்மயமாக்கல்
1920-களின் பிற்பகுதியில் சோவியத் யூனியனை நவீன தொழில்மயமான நாடாக மாற்ற ஸ்டாலின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தொடங்கினார்.
சோவியத் யூனியன் நவீனமயம் ஆக்கப்படாவிட்டால், கம்யூனிசம் தோல்வியடையும் முதலாளித்துவ அண்டை நாடுகளால் அழிக்கப்படும் என்று அவர் அஞ்சினார். அவர் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எஃகு உற்பத்தியை பெரிய அளவில் உயர்த்தினார். நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. அவருடைய திட்டங்கள் இரக்கமின்றி செயல்படுத்தப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு கடுமையான இலக்குகள் வழங்கப்பட்டன. பல தொழிலாளர்கள் அதைச் சாத்தியமற்றதாக நினைத்தனர். இலக்கில் தோல்வியுற்றவர்கள் நாசக்காரர்கள் என்று பலிகடா ஆக்கப்பட்டார்கள், அரசின் எதிரிகளாக சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது தூக்கிலிடப்பட்டார்கள்.
கூட்டுப் பண்ணைகளும் பஞ்சங்களும்
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபோது, சோவியத் விவசாயத்தில் சிறிய நில உரிமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அது திறமையின்மையால் பாதிக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் விவசாயத்தை நவீனமயமாக்கி, கூட்டுப் பண்ணைகளாக மாற்றினார். சாதாரண விவசாயிகள் இதை எதிர்த்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் கால்நடைகளைக் கொன்று, தானியங்களை ரகசியமாகப் பதுக்கி வைத்தார்கள்.
இதையடுத்து ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் 50 லட்சம் பேர் இறந்தனர். இருப்பினும்கூட, ஸ்டாலின் முடிவில் கிடைக்கும் நன்மை, செல்லும் பாதையை நியாயப்படுத்துவதாக நம்பினார். லட்சக்கணக்கான சிறு உரிமையாளர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள். 1930களின் பிற்பகுதியில் விவசாயம் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்டு உற்பத்தித் திறன் அதிகரித்தது.
ஸ்டாலினின் மாபெரும் பயங்கரவாதம்
ஸ்டாலின் தன்னை ஒரு சிறந்த கருணையுள்ள தலைவர் என்றும் சோவியத் யூனியனின் கதாநாயகன் என்றும் ஒரு பிம்பத்தை விளம்பரப்படுத்தினார்.
இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ராணுவத்தில் அவரை எதிர்க்கக்கூடிய எவரையும் அவர் விட்டு வைத்ததில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் 139 மத்திய குழு உறுப்பினர்களில் 93 பேர் கொல்லப்பட்டனர், 103 ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களில் 81 பேர் தூக்கிலிடப்பட்டனர். ரகசிய காவல்படை ஸ்டாலினிசத்தை கடுமையாகச் செயல்படுத்தியது. 30 லட்சம் பேர் கம்யூனிசத்தை எதிர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சைபீரியாவில் உள்ள கடும் தொழிலாளர் முகாம்களின் அமைப்பான குலாக்கிற்கு அனுப்பப்பட்டனர். சுமார் 7,50,000 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்டாலின் தனது மனைவியையும் மகனையும் இழந்தார்
1919 -ஆம் ஆண்டில், ஸ்டாலின் தனது இரண்டாவது மனைவி நடேஷ்டா அலிலுயேவாவை மணந்தார். அவர்களுக்கு ஸ்வெட்லானா மற்றும் வாஸ்ஸிலி என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
அவர் நடேஷ்டாவை துன்புறுத்தினார். இறுதியில் நடேஷ்டா 1932-ல் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணம் குடல் அழற்சியால் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது முதல் மனைவியின் மகன், யாகோவ், செம்படையில் ஒரு ராணுவ வீரராக இருந்தார். அவர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். ஜெர்மானியர்கள் அவரை வேறு ஒரு கைதிக்குப் பதிலாக விடுவிக்க முன்வந்தபோது, ஸ்டாலின் மறுத்துவிட்டார். ஏனென்றால், ஸ்டாலின் தனது மகன் தானாகவே சரண் அடைந்ததாக அவர் நம்பினார். யாகோவ் 1943 இல் நாஜி வதை முகாமில் உயிரிழந்தார்.
நாஜிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை
ஸ்டாலின் அடால்ஃப் ஹிட்லருடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர்கள் கிழக்கு ஐரோப்பாவை அவர்களுக்கு இடையே பிரித்துக்கொள்ள ஒப்புக்கொண்டிருந்தனர்.
அதனால், ஜூன் 1941-ஆம் ஆண்டில் நாஜிக்கள் நடத்திய ப்ளிட்ஸ்கிரீக் தாக்குதலுக்குத் ஸ்டாலின் படைகள் தயாராக இருக்கவில்லை. இதனால் நாஜி படைகள் போலந்து மற்றும் சோவியத் யூனியனுக்குள் நுழைந்தன. சோவியத் ராணுவம் பெரும் இழப்பை சந்தித்தது. ஹிட்லரின் துரோகத்தால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், எந்த முடிவும் எடுக்க முடியாமல் தனது அலுவலகத்திற்குப் பின்வாங்குகிறார். நாஜி போர் இயந்திரம் மாஸ்கோவை நோக்கி உருண்டு வருவதால் சோவியத் ஒன்றியம் பல நாட்கள் முடங்கிக் கிடந்தது.
ஹிட்லரை தோற்கடித்தார்
சோவியத் ஒன்றியத்தின் எதிர்காலம் சிக்கலில் இருந்ததால், நாஜிகளுக்கு எதிரான வெற்றியை அடைய மில்லியன் கணக்கானவர்களை தியாகம் செய்ய ஸ்டாலின் தயாராக இருந்தார்.
ஜெர்மன் படைகள் நாடு முழுவதும் பரவி, டிசம்பர் 1941-இல் கிட்டத்தட்ட மாஸ்கோவை அடைந்தன. ஸ்டாலின் நகரத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார், எப்படியும் வென்றாக வேண்டும் என அவர் தீர்மானித்தார். ஸ்டாலின்கிராட் போர்தான் போரின் திருப்புமுனை. ஹிட்லர் அவரை அவமானப்படுத்துவதற்காக ஸ்டாலினின் பெயரைத் தாங்கிய நகரத்தைத் தாக்கினார். ஆனால் ஸ்டாலின் தனது ராணுவத்திடம் "ஒரு அடி பின்வாங்கக்கூடாது" என்று கூறினார். அவர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை எதிர்கொண்டனர். ஆனால் 1943 -இல் நாஜிக்களை தோற்கடிக்க முடிந்தது. சோவியத் ராணுவம் ஜெர்மனி மற்றும் பெர்லின் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
ஸ்டாலினின் இரும்புத்திரை ஐரோப்பா மீது விழுகிறது
ஜெர்மனியின் தோல்வியில் ஸ்டாலின் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார். அதோடு கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் கிழக்கு பெர்லின் உட்பட சோவியத் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன.
இந்த நாடுகள் சோவியத் யூனியனின் துணைக் கோள் நாடுகளாக இருக்கும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அவருடைய முன்னாள் கூட்டாளிகளான அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது அவருடைய போட்டியாளர்களாக மாறின. மேலும் சர்ச்சில் ஐரோப்பாவின் மீது "இரும்புத்திரை" விழுகிறது என்று கூறினார். 29 ஆகஸ்ட் 1949 அன்று சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டை சோதித்தது. பனிப்போர் தீவிரமாகத் தொடங்கியது.
ஸ்டாலின் மரணம் - ஒரு சகாப்தத்தின் முடிவு
ஸ்டாலினின் கடைசி ஆண்டுகளில், அவர் பெரியளவில் சந்தேகப்படுபவராக மாறினார். மேலும் கட்சிக்குள் தனது எதிரிகளுக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை எடுத்தார்.
கடுமையான குடிப்பழக்கத்திற்குப் பிறகு, 1953 மார்ச் 5 அன்று ஸ்டாலின் மாரடைப்பால் இறந்தார். சோவியத் யூனியனை நிலப்பிரபுத்துவப் பொருளாதாரத்திலிருந்து தொழில்துறை சக்தியாக மாற்றி, ஹிட்லரை தோற்கடிப்பதில் முக்கியப் பங்காற்றிய இந்த மாபெரும் தலைவரின் இழப்பிற்காக சோவியத் யூனியனில் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்கள் வரலாற்றில் கொலைகார சர்வாதிகாரிகளில் ஒருவராக இருந்தவரின் மறைவுக்கு ஆரவாரம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக