நெருக்கடி அடையும் இராஜதந்திர முறுகல்: இந்தியாவுக்கு கனடா வழங்கிய பதிலடி
புதிய இணைப்பு
இராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா, இன்று தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.
இந்தியா, கனடாவுக்கான தமது உயர்ஸ்தானிகரை கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்த நிலையிலேயே கனடாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் செயற்பட்டமைக்கான ஆதாரங்களை பொலிஸார் சேகரித்த பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் கனடாவில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் குறித்த கணிசமான அளவு தகவல்கள் தங்களிடம் இருப்பதாக கனேடிய பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், கனடாவை தளமாகக் கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என்றும் ரோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம், தமது நாட்டிலுள்ள அதிகாரிகள் மூலம் தகவல்களைச் சேகரித்து வருகிறது. அத்துடன் இந்தத் தகவல்கள் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைக்க இந்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது என்றும் கனேடிய பொலிஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னதாக, 2023இல் சீக்கிய தீவிரவாதி நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவை கனடா குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தியா அதனை மறுத்து வந்தது.
இந்தநிலையில், இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்டவர்களை, விசாரணையின் பகுதியாக கனடா பார்ப்பதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியா தமது உயர்ஸ்தானிகரை இன்று கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்திருந்தது.
முதலாம் இணைப்பு
கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகரை திருப்பியழைக்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
சீக்கிய தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவ விசாரணையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இராஜதந்திரிகள் இணைக்கப்படுவதை கண்டித்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை இன்று அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, தமது எதிர்ப்பை அவரிடம் வெளியிட்டுள்ளது.
கனேடிய அரசாங்கம்
இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்த இந்தியா, அந்தக் குற்றச்சாட்டுகளை மோசமான குற்றச்சாட்டுகள் என்றும் விபரித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்திற்கு ட்ரூடோ அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு பதிலடியாக மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று கனேடிய அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தற்போதைய கனேடிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் வைத்து 2023 ஜூன் 18ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவின் தொடர்பு குறித்து தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வரும் கனேடிய பொலிஸார், இந்தியர்கள் சிலரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக