ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர்: புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர!
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இடதுசாரிப் பின்புலம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜேவிபி - மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் தலைவர் என்ற காரணத்தால் தெற்காசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
எப்படி பாலஸ்தீனப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிட்டு இஸரேலில் நடக்கும் அரசியல் மாற்றங்களை மதிப்பிட முடியாதோ, அதுபோல் இனச்சிக்கலைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவில் நடக்கும் அரசியல் மாற்றங்களை மதிப்பிட முடியாது. ”புதியவர் ஒருவர் வந்திருக்கிறார்.
கடந்த காலம் போல் சிங்கள உயர் குழாத்தில் இருந்து வந்தவரோ வாரிசு பின்புலம் கொண்டவரோ அல்ல அநுர, அவர் ஓர் இடதுசாரி, முற்கற்பிதங்கள் செய்ய வேண்டாம்” என்று நல்லெண்ணங்களையும் விருப்பங்களையும் நம்மவர்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
நல்லெண்ணங்களும் மனம் கவர் கற்பனைகளும் அரசியலில் பொருளற்றது. நலன்களும் நலன்களுக்கு இடையிலான முரண்பாடும் நலன்களின் பெயரிலான அணிசேர்க்கையும்தான் அரசியலில் பொருளுடையனவாகும்.
இடதுசாரி அனுர
எனவே, ஜேவிபியின் கடந்த கால வரலாற்றை சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களின் ஒருசில உடனடி கோரிக்கைகளை அநுரவிடம் முன் வைப்போம். தெற்காசியாவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் அதிகம் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
அவ்வகையில், ஜேவியும்கூட கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் நடத்திய அமைப்புத்தான். 1965 இல் தொடங்கிய இவ்வமைப்பு 1971 இல் கியூபாப் புரட்சியை ஒத்த கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு, ஜேவிபி சிறிமாவோ பண்டாரநாயக்காவால் தடை செய்யப்பட்டது.
பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஜே.ஆர். ஜெயவர்த்தன, தாம் வெற்றிப் பெற்றால் ஜேவிபி மீதான தடையை நீக்குவதாகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேவிபி உறுப்பினர்கள் 20,000 பேரை விடுவிப்பதாகவும் உறுதிமொழி தந்தார்.
இதுவும் ஒரு காரணமாக அமைய, 4 இல் 3 பங்கு பெரும்பான்மைக்கு மேல் பெற்று ஜே.ஆர். தேர்தலில் வெற்றிப் பெற்று, அதை அடுத்து 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் பிரகடனப்படுத்தினார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜேவிபி மீதான தடையை நீக்கி, 20000 ஜேவிபியினரையும் கூடவே அதன் தலைவர் ரோகன விஜயவீரவையும் சிறையில் இருந்து விடுதலை செய்தார்.
ஜே.ஆர். ஆயுதக் கிளர்ச்சி நடத்தியதற்காக முன்பு தடை செய்யப்பட்டிருந்த ஜேவிபியின் தலைவர் ரோகன விஜயவீர சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டு 4% வாக்குகள் பெறுவதற்கு சிங்கள அரசியல் இடமளித்தது.
இந்திய - இலங்கை உடன்படிக்கை
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜேவிபி ஜே.ஆர். ஆல் தடை செய்யப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்பட்ட போது அதற்கு எதிராக ஜேவிபி கிளர்ச்சியில் இறங்கியது.
1987 – 1989 களில் ஜேவிபி கிளர்ச்சி செய்த காலத்தில், ரோகன விஜயவீர மாறுவேடத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசப் படைகளால் ஜேவிபி உறுப்பினர்கள் ஆறுகளிலும் குளங்களிலும் தெருக்களிலும் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டனர்.
அதில் ஜேவிபியினர் சுமார் 60,000 - 80,000 பேர் சிறிலங்கா அரசப் படைகளால் கொல்லப்பட்டனர், பெரும்பகுதியினர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பிறகு 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பதவிக்கு வந்த நிலையில் ஜேவிபி மீதான தடை மீண்டும் நீக்கப்பட்டது. இப்படி இரண்டு முறை ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, இரண்டு முறை தடைசெய்யப்பட்டு, இரண்டு முறை அத்தடை நீக்கப்பட்ட வரலாறு கொண்ட ஜேவிபியைச் சேர்ந்தவர்தான் அநுரகுமார!
1987 ஆம் ஆண்டில் உருவான இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிராகவும் 13 ஆவது சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த காலப் பகுதியில்தான் அநுரகுமார ஜேவிபியில் இணைந்து அரசியலில் செயலூக்கத்துடன் பங்குபெறத் தொடங்கினார்.
இப்படியாக இந்திய எதிர்ப்பிலும் தமிழின எதிர்ப்பிலும் ஜேவிபி தீவிரம்காட்டிய காலத்தில் அரசியலில் அடியெடுத்து வைத்த அநுரகுமார, ஜேவிபியின் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி என்ற முன்னணியின் சார்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு, சிங்களப் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாகவும் ஆக முடிந்திருக்கிறது.
அதிரடி நடவடிக்கை
பதவிக்கு வந்தவுடன் அதிரடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்த, ஊழல் அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்த, குடியகல்வு அதிகாரியைக் கைது செய்த இடதுசாரி ஜனாதிபதி அநுர, முதலாளித்துவக் கொள்கை கொண்ட, ஏகாதிபத்திய சார்பு கொண்ட, இனவாதத்தால் மக்களை ஏமாற்றிய, ஊழலுக்கு பெயர் போன ஜனாதிபதிகள் ஜேவிபியின் மீதான தடையை நீக்கியது போல் ஆயுதப் போராட்டம் நடத்திய, சிறிலங்கா அரசால் நசுக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவாரா? கோஷங்களுக்கும் வெற்றுவேட்டுகளுக்கும் கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கும் அப்பால் இரத்தமும் சதையுமான நடைமுறை செயல்பாட்டில் இருந்துதான் இனப் பிரச்சனை அரசியலையும் ஜனநாயக அரசியலையும் முன்னேற்றத்திற்கான அரசியலையும் அவர் முன்னெடுக்க வேண்டும்.
ஜேவிபியின் மீதான தடை நீக்கப்பட்டு அவர்கள் சனநாயகப் பாதையில் நடைபோட அனுமதிக்கப்பட்டு, அதன் பெறுபேறாக இன்று ஜனாதிபதியாகி இருக்கும் அநுரகுமார, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஜனநாயக அரசியலுக்கு கதவு திறக்க வேண்டியது அவரது கடமையும் பொறுப்பும் ஆகும்.
1971 ஆம் ஆண்டு ஜேவிபி நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது, கதிர்காமத்தைச் சேர்ந்த பிரேமவதி மன்னம்பெரி என்ற சிங்களப் பெண் ஜேவிபியைச் சேர்ந்தவர் என்ற ஐயத்தின் பெயரால் ஆயுதப் படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் காவல் வாகனத்தில் கயிற்றில் கட்டப்பட்டு தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார்.
அக்குற்றத்தில் ஈடுபட்டிருந்த இருவர் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றனர். அதில் லெப்டினெண்ட் ஆல்பிரட் விஜெய்சூர்யா சிறையில் இருந்த போதே மாரடைப்பால் இறந்து போனார். இன்னொருவரான அமரதாச ரட்நாயக்கே சிறைத் தண்டனை முடிந்து வீடு திரும்பியப் பின்னர், 1988 ஆம் ஆண்டு அவரது வீட்டில் வைத்து ஜேவிபியினரால் கொல்லப்பட்டார்.
மன்னம்பெரி கொலைக்கு தண்டனையாக அமரதாசாவை ஜேவிபி கொன்றது. சிறிலங்கா அரசப் படையால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிங்களப் பெண் மன்னம்பெரியைப் போலவே அரசப் படையால் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் அகற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட காணொளி வெளிவந்தன.
இறந்த உடல் கூட மனித மாண்புகளுக்கு எதிராக அவமானப்படுத்தப்பட்ட காட்சிகள் வெளிவந்தன. தமிழ்ப் பெண்கள் பாலியல் வதை முகாம்களில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை அம்பலத்திய அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
நீதியை உறுதி செய்வாரா அனுர
இசைப்பிரியாவைப் போலவே பல நூறு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் அவர்களது பெண் உறுப்புகளை அரசப் படையினர் தமது சப்பாத்து கால்களால் மிதிக்கும் காட்சிகளை கொண்ட காணொளிகள் உள்ளன.
இது தொடர்பாக புகைப்படங்கள், காணொளிகள், பன்னாட்டு மனித உரிமை அறிக்கைகள், வாக்குமூலங்கள், நேரடி சாட்சியங்கள் எனப் பற்பல சான்றுகள் உள்ளன. இக்கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட படையினரின் புகைப்படங்கள், காணொளிகள் , பெயர்கள் உள்ளன.
மன்னம்பெரிக்கு நீதியை உறுதிசெய்தது போல் இசைப்பிரியாவுக்கும் நீதியை உறுதி செய்வாரா அனுர? இக்கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட படையினரைத் தேடிப் பிடித்து, அவர்களைக் கைது செய்து,விசாரணைக்கு உட்படுத்தி, சிறையில் அடைத்து, தண்டனையை நிறைவேற்றுவாரா அனுர?
பாதிக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் மனக் காயத்தை ஆற்றுப்படுத்தக் கூடிய வகையில் இக்குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிப்பதன் மூலம் குற்றங்களுக்கு தண்டனையில்லாத பண்பாட்டை ( Culture of impunity) முடிவுக்கு கொண்டு வருவாரா அனுர?
ஊழல் எதிர்ப்பை மையமிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார சிங்களப் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளாரே தவிர ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களிடம் கணிசமான வாக்குகளைப் பெறவில்லை ஓரளவுக்குத்தான் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
இந்த இனச் சமூகங்களின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு கிறித்துமஸ் நாளில் சுனாமி ஆழிப் பேரலை சிறிலங்காவையும் தாக்கியது. அப்போது சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்பட்டிருந்த நேரம். சுனாமி பேரிடர் ஏற்படுத்திய அழிவில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலானப் போராட்டமாகும்.
சந்திரிகா அரசும் புலிகளும் இணைந்து சுனாமிப் பொதுகட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயன்றபோது, சந்திரிகா அரசில் அமைச்சராக இருந்த அநுர குமார, சிங்கள அரசு புலிகளுடன் இணைந்து மீள்கட்டுமான நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்த்தார்.
தமிழர்களின் நம்பிக்கை
பயங்கரவாதிகளுடனான கூட்டு நடவடிக்கை அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது ஜேவிபியின் குற்றச்சாட்டு. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் கண்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கையே உடைந்து போகும் நிலை ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் உடனடியாக தலையிட்டு உரிய விளக்கங்களைத் தந்து சந்திரிகாவின் ஐயத்தைப் போக்கினர். புரிந்துணர்வு உடன்படிக்கை நீடித்தது; இதை விமர்சித்து 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அநுரகுமார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பொதுக் கட்டமைப்புக்கு எதிராக சிங்கள மக்களிடம் பரப்புரை செய்து அதை செயல்பட விடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டார் அநுரகுமார.
அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு, போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சிறிலங்கா அரசு புலிகளுடன் போருக்குச் செல்ல வேண்டும் என்பது ஜேவிபியின் நிலைப்பாடு ஆகும். அதே நிலைப்பாட்டைக் கொண்ட மகிந்த ராஜபக்சவுடன் கூட்டணி வைத்து அவரை ஜனாதிபதியாக்கியது ஜேவிபி. பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கு ஆள் திரட்டிக் கொடுத்தது ஜேவிபி.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் விளைபயனாய் ஏற்பட்ட வடக்குகிழக்கு இணைப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை இரத்து செய்ய வைத்தது ஜேவிபி. அவ்வழக்கை நடத்தும் பணிக்கு அநுர தான் தலைமையேற்றார். தமிழர்களின் நம்பிக்கையை அநுர பெற முடியாமல் போனதற்கான சில காரணங்கள் இவை.
எந்தவொன்றையும் ஏரண (தருக்கம்) வகையிலும் திறனாய்வுக்கு உட்படுத்தியும் அலசி ஆராய்ந்தால் சரியான முடிவுகளை எட்ட முடியும்.
அப்படி செய்ய முடியாத விடத்து, பட்டறிவில் இருந்து சரியான முடிவுகளை எட்ட முடியும். ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை தாம் எதிர்கொண்டுவரும் நூறாண்டு கால ஒடுக்குமுறைகளில் இருந்தும் அதற்கு எதிராக மேற்கொண்ட தொடர் போராட்டங்களில் இருந்தும் அவற்றுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் முகம் கொடுத்த பாங்கிலிருந்தும் அதில் அடைந்த வெற்றி தோல்விகளில் இருந்தும் சரியான முடிவுகளை வந்தடைய முடியும்.
தோற்றங்களுக்கும் மேல் பூச்சுகளுக்கும் சாயல்களுக்கும் மயங்கிப் போக வேண்டிய தேவையில்லை. அநுரவின் மீது அவநம்பிக்கை கொள்வோரின் கருத்தை மாற்றியமைக்கவும் அவரைப் புதிய வருகையாக கருதி புளங்காகிதம் அடைவோரை மகிழ்விக்கவும் ஜேவிபி மீதான தடையை ஜே.ஆர். நீக்கியது போல் விடுதலைப் புலிகள் மீதான தடையை அநுர நீக்கினாலென்ன? மன்னம்பெரிக்கு நீதியை உறுதி செய்தது போல் இசைப்பிரியாக்களுக்கும் நீதியை உறுதிசெய்தாலென்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக