ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்கள்: ஆளுநரிடம் பெற்றோர் முறைப்பாடு!
யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த இளைஞன் உட்பட 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வடக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு வடக்கு ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று(26) காலை கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பெற்றோரது கோரிக்கை
அத்துடன், பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், முறைபாடு செய்த பெற்றோர்களிடம் இளைஞர்களது விவரங்கள் பெறப்பட்டு வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரின் சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரது இடத்திற்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார்.
இதற்கமைய, 04.10.2024 அன்று பயணித்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவ பயிற்சி
ரஷ்ய (Russia) விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரையின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக