வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது : நாமல் திட்டவட்டம்விளம்பரம்
தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (21) அநுராதபுரம் நகரில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார திட்டங்கள்
அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து குறுகிய காலத்தில் நாட்டை பல்வேறு துறைகளில் முன்னேற்றினார்.
2015 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாட்டை கையளித்தோம். 2019 ஆம் ஆண்டு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த நாட்டையே கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்றார்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கத்துக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா என்ற தீர்மானமிக்க கேள்வி எழுந்த போது மக்களின் உயிரையே பாதுகாத்தோம். பொருளாதாரப் பாதிப்பை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் எமது அரசை வீழ்த்தினார்கள். அரசு வீழ்ச்சியடைந்தாலும் நாட்டை வீழ்ச்சியடைய செய்யவில்லை.
இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவிடம் அரசைக் கையளித்து நிலைமைகளைச் சீர்செய்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினோம். நாட்டின் தேசியத்துக்கும், இராணுவத்தினருக்கும் எதிரான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க முடியாது.
காணி அதிகாரங்கள்
சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவும், குறுகிய நோக்கங்களுக்காக செயற்படவும் நாங்கள் தயாராகவில்லை என்பதால் தனித்துத் தீர்மானங்களை எடுத்துள்ளோம். சவால்களைக் கண்டு நாங்கள் அச்சமடையவில்லை. சவால்களை நான் விரும்புகின்றேன்.
எவர் மீதும் சேறு பூசவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றோம். தேசிய உற்பத்திகளை நிச்சயம் மேம்படுத்துவோம். விவசாயத்துறையில் இருந்து எமது தேசிய உற்பத்தி எழுச்சியை முன்னெடுப்போம்.
விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். கடன் பெற்று உணவு வழங்குவது சிறந்த பொருளாதார கொள்கையல்ல, விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்துவோம்.
இலங்கை ஒற்றையாட்சி நாடு. நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே படை வீரர்கள் போரிட்டார்கள். நாங்கள் அரசியலில் இருக்கும் வரை இந்த நாட்டில் எல்லைக் கிராமங்கள் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இந்தப் பௌத்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை மற்றும் கௌரவமளிக்கத் தயார். அதனைச் செய்வோம்.
அதேபோல் மாகாண சபைக்குள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம். தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன்.
தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவோம். ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக