பிரிகேடியர் சொர்ணம்

எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும்.
பிரிகேடியர் சொர்ணம்
மதிப்பிற்குரிய பெருந்தளபதியுடனான நினைவுகளுடன்…
திரு.அச்சுதன்
(வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்தவர்)
சொர்ணம் அண்ணா. அந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு….
பள்ளிப் பருவங்களில் நாங்கள் புகைப்படங்களில் பார்த்து, அறிந்து வியந்த ஒரு மிகப்பெரும் கதாநாயகன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா, ஒரு முறையேனும் அவருடன் கதைத்து விட மாட்டோமா என்றெல்லாம் ஏக்கம் கொண்டிருந்தோம்.
உலகம் போற்றும் எம் பெரும் தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன் பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றிக் கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதியவர். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும் என்னையும் என்னைப் போல் பலரையும் கவர்ந்தன.
நான் எனது கல்வியை முடித்து குறிப்பிட்ட வேலை திட்டங்களைச் செய்து கொண்டு 1998 இல் தாயகம் சென்றேன்.
மிகவும் கடுமையாக ஜெயசிக்குறு எதிர் சமர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஒட்டுசுட்டான் வரை ராணுவம் முன்னேறி இருந்தது. இதே வேளை ஓயாத அலைகள்-3 இன் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியிருந்தன. ஆனால் அப்போது அந்தச் சமரின் பெயர் அறியவில்லை. ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதி ராணுவத்தின் அடுத்த நகர்வாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் ஒட்டுசுட்டான் முக்கிய தளமாக இருந்தது. இந்தப் பகுதியின் பொறுப்பு சொர்ணம் அண்ணாவிற்கே வழங்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் 3 எதிர்ச் சமர் இப்பகுதியில் தான் ஆரம்பமானது. இச்சமருக்கான தொடக்க வேலைகளைச் செய்ததும் ஒட்டுசுட்டானை உடைத்து எதிரிகளை ஓட விரட்டி ஒரு பெரும் வெற்றிச் சமருக்கு வழி வகுத்து கொடுத்த வெற்றி நாயகனாக இவர் இருந்தார் என்பதையும் அறிந்தேன்.
அதேபோல் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிழக்குக் கடல் பரப்பும் மேற்குக் கடல் பரப்பும் விரிவுபடுத்தப்பட்ட காலகட்டத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசை அண்ணாவிற்கு உறுதுணையாக தமிழீழத்தின் மேற்குக் கடல் பகுதிகளுக்கான மன்னாரில் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக சொர்ணம் அண்ணா நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆண்டுகள் மெதுவாகக் கடந்தன. 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். ஒருமுறை கண்டுவிட மாட்டோமா என்று நினைத்திருந்த எனக்கு அப்பெருந் தளபதியுடன் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பும் காலமும் கிடைத்ததில் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறேன்.
வான் புலிகளின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் சங்கர் அண்ணா அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. எமது படையாணி ஒரு மிகப்பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் இழப்பு இடியாய் விழுந்தது.
விமானப் படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தலைவரின் ஆலோசனைக்கிணங்க கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக்கூடிய ஒரு நபராக எமது தளபதி சொர்ணம் அண்ணா வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரவர்களால் நியமிக்கப்படுகிறார்.
எமது பணிகள் காடு சார்ந்த இடங்களில் அமைந்திருந்ததால் அவரின் அனுபவம் எமக்கு பல விடயங்களை கற்றுத் தந்தது.
வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
தலைவருடன் நெருக்கமாகப் பயணித்து அவரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு தளபதியுடன் பயணிக்கும் வாய்ப்பை நோக்கிச் சென்றேன்.
புதுக்குடியிருப்பில் இருக்கும் அவரின் தளத்திற்கு என்னை அழைத்திருந்தார். நான் சென்றவுடன் அவரே வந்து என்னை அழைத்துச் சென்று விருந்துபசாரங்கள் செய்து வெளிநாட்டு நிலவரங்களை கேட்டு அறிந்து கொண்டார்.
சங்கர் அண்ணா விட்டுச் சென்ற இடத்தை நிரப்பி அடுத்த கட்டத்திற்கு நாம் நகர உதவி தலைவர் கையளித்த பாரிய பணியை அவர் சிறப்புடன் நிறைவேற்றியது போன்ற பல விடயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
வான்புலிகள் காட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக எமக்கும் கற்றுக் கொடுத்தார். அருகிலேயே வைத்து நெருக்கடியான காலகட்டத்தை எப்படி கையாள்வது என்பதை செயல் வடிவாக்கிக் கற்றுத் தந்தார்.
பெருந் தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நடாத்தக்கூடிய வல்லமை மிக்க அத் தளபதி வரும் நாட்களில் ஆகாய தரைச் சமர்களை ஒருங்கிணைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. போராளிகளை வழிநடத்தி சீர்ப்பட அதை எமது கைகளில் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.
அவர் என்னை அழைத்து ‘நான் தொடர்ந்து இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் எனக்கு வேறு பொறுப்புக்கள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் தெளிவாக விரைவாகக் கற்றுப் பொறுப்பெடுங்கள்’ என்றார். பாதுகாப்பு. போராளிகளின் மனங்களை தொய்வடையாமல் பார்த்துக் கொள்வது. இப்பெரும் இயக்கத்தின் நிர்வாக முறைமை போன்றவற்றை செவ்வனக் கற்றுத் தந்தார்.
ஒரு நாள் என்னை மணலாற்றுக் காட்டிற்கு அழைத்துச் சென்று தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவை நோக்கி ‘லீமா இவர் யார் என்று தெரியுமா? இவர் தான் எனக்கு அடுத்துப் பொறுப்பேற்கப் போகிறார் என அறிமுகம் செய்தார். பின்பு இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் தலைவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டி மிகவும் அக்கறையுடன் சம்பவங்களை விளக்கிப் பொறுப்புணர்வுடன் நடந்த பெருந் தளபதி அவர். யாரின் அறிமுகமெல்லாம் தேவைப்பட்டதோ அவர்களையெல்லாம் சிறப்புடன் அறிமுகம் செய்து உறுதுணை மிக்க தளபதியாக விளங்கினார் சொர்ணம் அண்ணா.
காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த சொர்ணம் அண்ணா எமது ஒடுதளத்திற்கான பாதையாக இரணைமடுவிற்க்கு கிழக்காகவும் வட்டக்கச்சி யிலிருந்து பழைய கண்டி வீதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். இது சண்டை தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடுதளம் அமைக்கும் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது.
இந்தக் காலகட்டத்தில் நான் மீண்டும் வெளிவேலையாக அனுப்பப்பட்டிருந்தேன். அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு ஏற்பட்டது.
அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிற்கு வழங்கினார்.
எங்கெல்லாம் தேசியத்தலைவர் நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் 55 (பைபை) யின் குரல் முழங்கும். அது தான் சொர்ணம் அண்ணாவின் திறன்.
தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார்.
சிலகாலம் கடந்த பின் தலைவரின் பணிப்பின் பெயரில் வட்டக்கச்சி முகாமில் வைத்து சிறந்த கட்டமைப்பாக என்னிடம் வான்படையைக் கையளித்து தனது வாகனம் ஒன்றையும் தந்தார். பறந்து காட்டுங்கள் உங்கள் காட்டில் மழை பெய்யும் எனத் தட்டிக் கொடுத்து என்ன உதவி என்றாலும் அழையுங்கள் செய்து தருகிறேன் எனக் கூறி மீண்டும் கோணமலை சென்றார். அடிக்கடி என்னை அழைத்து நிலவரங்களை தெரிந்து கொள்வார்.
அன்ரன் பாலசிங்கம் அண்ணா இறுதியாக தமிழ் ஈழம் வந்தபோது என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். தமிழீழத்தின் பெரும் தளபதிகள் ஒன்று கூடியிருந்த அந்த இடத்தில் என்னையும் வான்புலியின் சிறப்பு தளபதி யாக அறிமுகம் செய்து பெருமைப் படுத்தினார். நன்றி உணர்வோடு நான் அவரை நினைக்கிறேன். தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த சொர்ணமண்ணாவுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
நான் அறிந்து செய்வதறியாமல் நின்ற அவரின் ஈகம்.
வாழ்வா சாவா என்று நம் தேசம் களம் கண்டு கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய் தேசத்திற்கான பெரும் பணியில் இணைத்துவிட்டு அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையவர். அப்பாவும் மகளுமாய் ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காகப் பணி செய்து மடிந்த வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய் நிலம். இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது மகளிற்க்கும் வீரவணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக