உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 14 மார்ச், 2025

a 276 தமிழிழீழக்கதை. (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

 


தமிழிழீழக்கதை.   (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு


பாகம் இரண்டின் மூன்றாவதுதொடர்

வராலாற்று புகழ் மிக்க திருநெல்வேலி  தாக்குதலிற்காக லெப். செல்லக்கிளி அம்மான் தலைமையில் அவர் காடுமேடுகள் எல்லாம் கொண்டு சென்று கடுமையான பயிற்சியையும் அதைவிட மன உறுதியையும் இளைஞர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார் அம்மான்

அது மட்டும் அல்ல தனது பசுமாட்டை வித்து வேண்டிய G,3 என்ற வலுவான துப்பாக்கியை தம்பி என செல்லமாக அழைக்கும் பிரபாகரனுக்கு வழங்கியிருந்தார், இப்படி செல்லக்கிளியின் சிறப்புப்பயிற்சி இரவு பகலாக நடந்துகொண்டியிருந்தது,  ஆனால் இது அவரின் இறுதிச் சண்டையாகயிருக்கும் என அம்மானோ அல்லது அவரோடு சென்ற இளைஞர்களோ கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்

ஒரு அணியை உருவாக்கி பயிற்சி வழங்கிக்கொண்டுயிருந்தார் அம்மான் அந்த அணிக்கான பயிற்சியை வழங்குவதற்கான அனுபவம் திறமை ஆளுமை என்பன அக்காலப்பகுதியில் செல்லக்கிளி அம்மானுக்கே இருந்தது அவ் இளைஞர் குழுவில் வயது கூடியவர் அம்மானே ஆவார் ஏணைவர்கள் அம்மானை விட மிகவும் வயது குறைந்தவர்களாகவே காணப்பட்டார்கள் ,ஆனால் அவரிடம் பயிற்சி எடுத்த அனைவரும் உறுதியானவர்களாவும், எந்த நேரமும் தங்களின் உயிரை அர்ப்பணிக்கக் கூடியவர்களாகவும், காணப்பட்டார்கள். அதை விட அதில் இருந்த அனைவரும் சிங்களக் காடையர்களின் தமிழர் மீதான  வன்முறைகளை நன்கு அறிந்தவர்கள். சிங்களக்காடையர்கள் தமிழர்களின் இரத்தத்தைக் குடிப்பவர்கள்;  அதை விட  தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்துபவர்கள், அத்தோடு உடமைகளைப் பறிப்பவர்கள்  என்பதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல தொடர்ச்சியாக பொறுமையாக இருக்க முடியாது இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.என அவர்கள் நினைத்தார்கள் ,

தம்பியாகச் சென்ற பிரபாகரன் அந்த அமைப்பின் தலைவர் ஆவார் எவ்விதமான பெரும் தன்மையும் இன்றி அம்மானின் தலையின் கீழ் தானும் ஒரு வீரனாகச் சென்று அம்மான் கொடுத்த துப்பாக்கியால் மிகவும் நிதனமாக குறி தவறாமல் சுட்டு இராணுவத்தினரைச் சுட்டு அச்சண்டையின் வெற்றியை தீர்மானித்த கதநாயகனாக தலைவர் பிரபாகரனே இருந்தார். ஆனால் அதை வாழ்த்துவதற்கு அம்மான் உயிரோடு இல்லை என்ற கவலையே எல்லோருடமும் இருந்தது எனவே இவர்களின் முதல் கூடுதலான இராணுவத்தை  அழிப்பதற்கான தாக்குதலிற்கு செல்லக்கிளி தலைமையாலான அணியின் பயிற்சி நிறைவு செய்யப்பட்டு அதில் தானும் ஒருதனாக தலைவர் செல்கின்றார்….. இத்தாக்குதல் பற்றி கேணல் கிட்டு அவர்கள் விளக்கப் படுத்துகின்றார்;

23/07/1983 அன்று திருநெல்வேலித்தாக்குதல் பற்றி கேணல் கிட்டு அவர்கள்….

ஆயுதப் போராட்டம் உச்சம் தொட்ட நாள்  .23/07/1983 வெற்றிகர தாக்குதல் பற்றி கேணல் கிட்டு அவர்கள் விரிவாக விளக்குகின்றார்.

 23.7.1983 திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்து கொண்டிருக்கிறது, வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் என்னோடு தம்பி மற்றும் ஏனைய தோழர்கள்;நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம், அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நிற்க, நாங்கள் இறங்க, அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளி வரத்தொடங்க, விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க, வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை.

வெளிச்சம் போட்ட இரு வீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை அவர்கள் இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர். முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர், விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர், கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை வெடிமருந்து தயார் படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும்; என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும் விட தாக்குதலின் போது சண்டையும் போட வேண்டும்.எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல்; எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில் கண்ணி வெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம்; அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு “வோக்கிரோக்கி”  அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும், செல்லக்கிளியும், அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம், ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில்  விக்ரர் விலகி தனக்குஒதுக்கப் பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான்,  சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்  கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான்; துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும்; துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்;

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கையில் “வோக்கி” செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான்,  அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்க வைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர்,  “அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ!” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் முன்னால் ஜீப் பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில்…. வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன;

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரை தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது; நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம், அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக் மெல்ல வந்து கொண்டிருக்கின்றன;

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி! ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம்,  ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எதுவும்  எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்து சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்,

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் இருந்து ஓடி வருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த  சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான்; பின்னர் அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனை  மறுபடியும் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை; அப்போது தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை.

அவன் ஓடிவிட  ஜீப்புக்குக் கிட்டேயிருந்து ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளால் சுட்டான். துப்பாக்கி திடீரென்று நின்றுவிட  விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டன என்று குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தை மாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தபோது அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும்,  கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன்!  பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்;தம்பி  இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது; சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது;

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது; G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத் தொடங்கியது…..

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால்…! இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்மையாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியின் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்ட நிற்கிறார்  எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார்; ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதூரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்து கொண்டு மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன, இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது….…

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜீப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கித் திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன…. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து “பசீர் காக்கா” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்…. றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி சொல்லி உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார்  காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை;  அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான் ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே “கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின. இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் “தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பி பக்கம்  நோக்கிச்சுட்டனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்து விட்டது.சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார் நிலைக்குக் கொண்டுவந்து “யாரது” என்று முன்னே வந்தனர்.”அது நான்தானப்பா” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கட பக்கம் எப்படி என்றார்? “அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை” என்றார் ரஞ்சன்.”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது” ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும், சந்தோசத்தையும் காணவில்லை? “வா பார்ப்போம்” என்றவாறு தன் பிரியத்திற்குரிய  G3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தை அடைந்தான். அங்கு புலேந்திரன், சந்தோசத்தைக் காணவில்லை. “எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து “அண்ணா அவன் முனங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் முனங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும்  வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். G3யின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவ வீரனை இன்னோர் போராளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும், நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்…..”கரையால் வாருங்கள்” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம்; இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் வேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் “அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார். பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க “அம்மானைக் காணவில்லை” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும், புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். “டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் பலமாக எதிரொலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்து விட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது….

செல்லக்கிளியின் வீரச்சாவிற்குப்பின் இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும் அனைத்து மாவட்டங்களிற்கும் கட்டளை வழங்கும் இராணுவத் தளபதியாக தலைரால் கிட்டு நியமிக்கப்பட்டார். 


செல்லக்கிளி அண்ணையின் வீரச்சாவிற்குப்பிறகு தலைவரின் மனநிலை எப்படி இருந்தது

செல்லங்கிளி அண்ணெ விரச்சாவு அடைந்த பின் எங்கள் எல்லோருக்கும் ஒரு உறுதி அற்ற மனநிலையோடுதான் இருந்தோம் ஏனெனில் எங்கள் எல்லோரையும் விட வயதிலும் அனுபவத்திலும் எதையும் செய்யலாம் என்ற தன்நம்பிக்கையும் அவரிடமே இருந்தது ,அதைவிட நாம் ஆரம்ப காலத்தில் மறைப்பாகயிருந்த வன்னிக்காடுகள் அனைத்தும் அவருக்குப் பழக்கப்பட்டவை அதைவிட எப்படியான இறுக்கமான நிலை ஏற்பட்டாலும் போராளிகளிக்கு பறைப்பு இடம் மற்றும் உணவு விடயங்கள் சம்மந்தமாக அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்து வந்தார்,
அதனால் அவரின் வீரச்சாவிற்குப்பின் எமது இயக்கத்தில் பாரிய பின் அடைவு ஒன்று ஏற்பட்டது, இருந்தும் அவரின் இலட்சியத்தை தொடர வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் உயிரை அற்பணித்துச் செயல்பட்டோம், தொடர்ந்து இலங்கை அரசபடைகளின் தமிழர்மீதான இனவளிப்பைக் கண்டு இந்தியா அதரவு அழிக்க முன்வந்தது, அதனால் ஈழப் போராளிகளாகிய நாங்கள் அவர்களிடம் இருந்து இராணுவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டோம் என அவர் குறிப்பட்டார்,

இத்தாக்குதலைத் தொடர்ந்து சிங்களக்காடையர்களின் தமிழர்மீதான இனப் படுகொலையையும் தமிழர்களின் பொருளாதாரச் சுரண்டல் அல்லது அழித்தல் இப்படியான உணர்வு இவர்களிடம் உள்ளது என்பதை தமிழர் தேசம் அறிந்த நாள் கறுப்பு யூலை.

1983 யூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதே நாள் அதே திருநெல் வேலியைச் சேர்ந்த 43 தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனார்.

4 /07 /1983  இரவு தொடங்கிதென்னிலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக்காடையர்கள் தாக்குதல் ஆரம்பம் ஆனது. குண்டர்களால் கொழும்பு உட்பட அனைத்துப்பகுதிகளிலும் இனவன்முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக் கலவரத்தின்போது வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் சிறைசாலைக் கதவை சிங்களக் காவலர்களான ஜெயிலர், ரோஜர், இவர்களே திறந்து விட்டுள்ளனர். குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அதில் அடங்கியிருந்தனர். குட்டிமணியின் உடல் இழுத்துவரப்பட்ட போது அவரின் உடலில் அசைவுகள் இருந்தாகவும் நேரில் பார்த்த ஒரு சிங்களக் கைதி தெரிவித்துள்ளார். 

குட்டி மணிக்கு நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது;” எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து ஒரு பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள் நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.அவர் கண்கூட தமிழீழத்தை பார்க்கக்கூடாது என்பதில் சிங்கள வெறியர்கள் கவனமாகயிருந்துள்ளனர். அவரது இரண்டுகண்களையும் கூரிய ஆயுதத்தால் தோண்டி எடுத்து தங்களின் காலில் போட்டு மிதித்ததை ஏனைய கைதிகள்பார்த்து கைதட்டி ஆரவாரப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் கண்களும் தோண்டி துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர். 52 தமிழ் கைதிகள் கை, கால், கழுத்து வெட்டப்பட்டு கொடூ ரமாகக் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து தென்னிலங்கையில் கூரிய ஆயுதங்களோடு சென்ற சிங்களக் காடையர்கள் ஒன்றாக வாழ்ந்த மனிதர்களின் மனங்களில் இன வேற்றுமையைத் தூவி அரச படைகளின் உதவியுடன்இனப்படுகொலைகளை செயதுகொண்டிருந்தார்கள்

கொழும்பு விதிகளில் காரில் சென்ற தமிழர்களின் கார்கள் காடையர்களால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டன.

இதை நேரில் பார்த்த ஒரு சிங்களவரின்கதை “கார் ஒன்று வந்து கொண்டிருந்தது காரை எம்மவர்கள் மறித்தார்கள் தாயும், தகப்பனையும் உடனே வெளியே இறங்கினார்கள் 15 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரு தமிழ் பிள்ளைகள் காருக்குள் இருந்தார்கள். காரைச் சுற்றி ஆயிரத்திற்கு மேல் எம்மவர்கள்  “பெற்றோல் கேன்” என்பனவற்றுடன் நின்றார்கள். ஒரு சிலர் காரை எரிப்பதற்கு கார்மீது பெற்றோல் ஊற்றிக் கொண்டு இருந்தரர்கள் சிறுவர்கள் என்றாலும் அவர்களிற்கு எம்மை எரிக்கப் போகின்றார்கள் என்பது விளங்கி விட்டது. மூத்த மகள் பெரிதாகக்கத்தி “அம்மா அப்பா எங்களை எரிக்கப் போகின்றார்கள் வேகமாக உள்ள வாங்கோ” என்று தாயையும் தகப்பனையும் இழுத்து காறுக்குள் எடுத்து அவசாரமாகக் காரின் கதவைச்சாத்தினார்கள்.காடையர்கள் கார்மீது நெருப்பு வைத்தார்கள். துடிதுடிக்க நான்கு பேரும் எரிந்து கொண்டுயிருந்தார்கள். இப்படி பல நூறு சம்பவங்கள் நடந்தன.

 இது தான் அந்தக்கார்

 ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடமைகள் அளிக்கப்பட்டன,

எண்ணாயிரம் தமிழர்களின் வீடுகள் உடைக்கப்பட்டு, அனைத்துப் பொருட்களும் சூறையாடப்பட்ட பின்னர் அவை எரிக்கப்பட்டன. 
அவ் நிலங்களைக் சிங்களவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். நானூறு தமிழ்பெண்கள் சிங்களக் காடையர்களால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு; அவர்களின் மார்பகங்கள் வெட்டப்பட்டு, தார் கொதிக்கும் தார்பீப்பாய்க்குள் போடப்பட்டனர். சுமார் இருபத்தையாயிரம்  தமிழர்கள் தென்னிலங்கையை விட்டு வடக்கு மற்றும் கிழக்கிற்கு உடுத்த உடுப்புக்களுடன் கொழும்பில் இருந்து கலைக்கப் பட்டனர்.

ஒரு தொகுதித் தமிழர்கள் பெரிய படகுகளில் தப்பி யாழ் காங்கேசன் துறைக்கு வந்து சேர்ந்தார்கள். ஏனையவர்கள் கால் நடையாக உடுத்த உடுப்புக்களுடன் வடக்கு மற்றும் கிழக்கிற்குச் சென்றார்கள்.அதை அடுத்து ஒரு சில வாரங்களில் லட்சக்கணக்கில் தமிழர்கள் படகு மூலம் இந்தியாவிற்கு ஓடித் தப்பினார்கள். தமிழகம் அவர்களை அன்போடு ஏற்றுக்கொண்டது. கட்சி பேதமின்றி அனைவரும் “அவர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்று ஏற்றுக்கொண்டார்கள்”. இவர்களின் நிலையைப் பார்த்து இந்திய மத்திய அரசு விரும்பியோ விரும்பாமலோ சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அக்காலத்தில் ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்தார்கள்.

அதனால் இலங்கையில் வாழும் சிறுபாண்மை தமிழர்களிற்கு உதவாமல் விட்டால் தேர்தலின் போது ஆறுகோடி மக்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும்; அடுத்து ஐரோப்பியவில் உள்ள இங்கிலாந்தில்  மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டால்  தனது நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.  அதே நேரம் உலகத்தில் வாழும் ஒட்டு தொத்த தமிழர்களின் செல்வாக்கும் ஆதரவும் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரசிக்கு இருக்காது என்பதை அவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.

 இதைத் தொடர்ந்து,இந்தியா மத்திய அரசு தமிழ் இளைஞர்களிற்கு பயிற்சி தர முன்வந்தது.

சில முன்னோடி நடவடிக்கைகளை செய்வதற்குஇந்தியா திட்டமிட்டது அதனை தொடர்ந்து விடுதலைஇயக்கங்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முன்வந்தது தொடர்ந்துஅனைத்து ஈழ விடுதலைக்காகப்போராடிய இயக்கங்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டார்கள், அதன் முதல்கட்டமாக எமது விடுதலை இயக்கம் சார்பாக தேசியத்தலைவர் தமிழீழம் இருந்தும், அன்ரன் பாலசிங்கம் அவர்கள் லண்டனில் இருந்தும் தமிழகம் வந்து சேர்ந்தார்கள்.

தமிழ் இளைஞர்களிற்கு ஆயுதப்பயிற்சிகொடுத்து இலங்கையில் வாழும் சிறுபாண்மை தமிழர்களை பாதுகாக்க தாங்கள் உதவ முன்வருவதாக இந்திய மத்திய அரசு அவர்களின் நம்பிக்கையான புலனாய்வு முகவர்கள் ஊடாக தகவலை தெரியப்படுத்தியது.

1983 /08 மாதம்ஆம்பத்தில் இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கு கடுமமையாக உழைத்த அவரின் மனைவி அடல் மற்றும்  பாலா அண்ணை இதைப்பற்றி விளக்குகின்றார்.

விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி1983 ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதி வன்னிக் கெரில்லாப் பயிற்சிப் பாசறையிலிருந்து தலைவர் பிரபாகரன் என்னோடு தொடர்பை ஏற்படுத்தி லண்டனில் அவ்வேளை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

என்னையும் எனது மனைவி அடலையும்  உடனடியாகச் சென்னைக்கு வருமாறு பணித்திருந்தார். தமிழ்ப் போராளிகளுக்கென இராணுவப் பயிற்சி திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசு செயற்படுத்தப் போவதாகத் தமிழீழத்தில் வதந்திகள் அடிபடுவதாகவும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏராளமான இளைஞர்களை அணிசேர்த்துக் கடல் மார்க்கமாகத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாகவும், உடனடியாகத் தமிழ்நாடு சென்று நிலமையை அறிந்து தன்னுடன் தொடர்பு  கொள்ளுமாறும் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழரின் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு பெரும் எடுப்பில் தலையிட முடிவு செய்திருப்பதால் விடுதலைப் போராட்டம் புதிய வரலாற்றுத் திருப்பத்தை அடையப் போவதாகக் குறிப்பிட்ட பிரபாகரன் இம்முறை தமிழ்நாட்டில்  நாம் நிரந்தரமாக நீண்ட காலம் தங்கியிருந்து பணிபுரிய நேரிடும் என்றும் சூட்சுமமாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.

நானும் எனது மனைவி அடேலும் 1979லும் பின்பு 1981லும் தமிழ்நாடு வந்து தலைவர் பிரபாகரனுடனும் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் போராளிகளுடனும் இரு தடவைகளும் பல மாதங்கள் வரை தங்கியிருந்து பணி புரிந்தோம்.

  1983 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் அவரது நூலில் தரப்படுகிறது.

எனவே ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, இந்தியத் தலையீட்டால் எழுந்த பிரச்சினைகளையும், குறிப்பாக இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மத்தியிலான உறவுகள் பற்றியுமே இப்பகுதியில் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

1983 ஆகஸ்ட் நடுப்பகுதியில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் வந்திறங்கிய போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்) எம்மை வரவேற்றார்.

 சென்னை நகரில் வூட்லண்ட்ஸ் எனப்படும் நடுத்தரமான சைவ விடுதியில் நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

நேசன்(ரவி பரமநாதன்) மற்றும் சில மூத்த உறுப்பினர்கள் அந்த விடுதியில் எம்மைச் சந்தித்தனர். அவ்வேளையில் சென்னையில் எமது இயக்கத்திற்கெனச் செயலகமோ அல்லது இரகசிய வீடுகளோ இருக்கவில்லை. எமது அறைக்குப் பக்கமாக இன்னொரு அறையும் எடுத்து அவ்விரு அறைகளையும் அரசியற் செயலகமாக மாற்றிச் சிறிது காலமாக அவ்விடுதியிலிருந்தே செயற்பட்டோம். பேவி சுப்ரமணியத்தின் நண்பரும் அ.தி.மு.க கட்சியில் மூத்த அமைச்சருமான திரு.காளிமுத்து நாம் ஒரு செயலகம் அமைக்கும் வரை விடுதியின் செலவீனங்கள் அனைத்தையும் பொறுப் பெடுத்தார். அந்த விடுதியில் இருந்தபடியே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டம் பற்றித் தகவல் அறிய முனைந்தோம்.தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை. அவ்வேளை எனக்கு முன்பு அறிமுகமான தமிழ்நாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவரைச் சந்தித்தபோது அவரிடம் இந்தியப் பயிற்சித் திட்டம் பற்றிக் கேட்டேன். இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இப்பயிற்சித் திட்டத்தைப் பொறுப்பேற்று நடத்துவதாகக் கூறிய அந்தப் பத்திரிக்கையாளர், என்னை றோ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்.

 அவ்வேளை சென்னையில் “றோ” அதிகாரிகளின் செயற்பாடுகள் மிகவும் இரகசியமானதாக இருந்ததால் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. 

அந்தச் சூழ்நிலையில்தான் எனக்கு முன்பு அறிமுகமான கலாநிதி ராஜேந்திரனைச் சந்தித்தேன். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜேந்திரன் எமது இயக்கத்தின் ஆதரவாளர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்திய இராணுவப் பயிற்சி திட்டத்தின் முழு விபரங்களுடன் வூட்லண்ட்ஸ் விடுதிக்கு வந்து என்னைச் சந்தித்தார்.தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஈழப் புரட்சி இயக்கம் (ஈரோஸ்) ஆகிய முன்று அமைப்புகளுக்கும் இந்திய இராணுவப் பயிற்சி திட்டத்தில் அனுமதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்த ராஜேந்திரன்; இந்த அமைப்புகளைச் சார்ந்த போராளிகள் ஏற்கனவே வட இந்தியாவிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமுக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார்.

 இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இந்தப் பயிற்சித் திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள் என்றும் கூறினார். காலம் சென்ற திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் மகனான திரு. சி. சந்திரகாசனே இப்பயிற்சித் திட்டத்திற்கு இணைப்பாளராக முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் கூறினார்.தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் திரு. சந்திரகாசனுக்கு முக்கிய தலைமைப்பீடப் பொறுப்பைப் பெற்றுக் கொடுப்பதே இந்திய புலனாய்வுத் துறையினரது இரகசியத் திட்டம் என்பதையும் திரு. ராஜேந்திரன் வெளியிட்டார். இந்திய இராணுவப் பயிற்சித்திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சிபாரிசு செய்யச் சந்திரகாசன் தயாராக இருக்கிறார் எனக் கூறிய ராஜேந்திரன் அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை உண்டு என்றார். அந்த நிபந்தனை என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு ஒருபுறம் ஆச்சரியத்தையும், மறுபுறம் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

அதாவது தமிழீழத் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகச் சந்திரகாசனை திரு.பிரபாகரன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்திய இராணுவப் பயிற்சி முடிவு பெற்றதும் எல்லாத் தமிழ் போராளி அமைப்புகளும் தமிழ்த் தேசிய இராணுவம் ஆக மாற்றப்படுமென்றும், அந்த தமிழர் இராணுவம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் வேளை, தமிழர் தேசத்தின் அரசியல் போராட்டத்தைச் சந்திரகாசன் தலைமை தாங்கி நடத்துவார் என்றும் ராஜேந்திரன் விளக்கினார்.


எமது கலந்துரையாடலை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக கொண்டிருந்த எனது மனைவி அடேல், சந்திரகாசனின் நிபந்தனையை அறிந்ததும் பொறுமையிழந்து ராஜேந்திரன் மீது சீறி விழுந்தார்.

எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் பிரபாகரனோ அல்லது எமது போராளிகளோ சந்திரகாசனைத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் நிபந்தனை என்றால் எமது இயக்கத்திற்கு இந்திய இராணுவப் பயிற்சி அவசியமில்லை என்று கடிந்து கொண்டார் அடேல்;

.இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கும் எமக்கும் மத்தியில் சூடான விவாதம் எழுந்தது.

அடேலின் கருத்தை ஆதரித்து நான் வாதிட்டேன்.சந்திரகாசனின் ஆசியைப் பெறாமல் ‘றோ’ அதிகாரிகளை நெருங்க முடியாது என்றும்;  ‘றோ’ அதிகாரிகளின் சிபாரிசு இன்றி விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி கிடைக்கப்போவதில்லை என்றும்; இந்தப் பயிற்சி கிடையாது போனால் புலிகள் இயக்கம் பின்னடைவை எதிர்நோக்க ஏனைய அமைப்புகள் வளர்ந்து முன்னேற்றம் அடையும் என்றும்; ராஜேந்திரன் பூச்சாண்டி காட்டினார். சந்திரகாசனின் உதவியின்றி இந்தியப் பயிற்சியை நாம் எப்படியோ பெற்றே தீருவோம் என நான் எதிர்த்து வாதாட தனது முயற்சி பலிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ராஜேந்திரன் ஆத்திரத்துடன் எமது அறையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

அதற்கப்புறம் நான் அவரைக் கண்டதேயில்லை.ராஜேந்திரனுடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றியும், இந்திய இராணுவப் பயிற்சியை ஒழுங்கு செய்வதில் சந்திரகாசன் வகிக்கும் பங்கு பற்றியும்; பயிற்சித் திட்டத்தில் இடம்பெற அவர் விதிக்கும் நிபந்தனை பற்றியும், சகல விபரங்களையும் நான் உடனடியாகப் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்திரகாசனின் உதவியை நாடவேண்டாம் எனத் தெரிவித்த பிரபாகரன்; எப்படியாவது முயன்று இந்தியப் புலனாய்வுத் துறையினருடன் என்னை நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இது எனக்கு ஒரு சிக்கலான சவாலாக அமைந்தது. சந்திரகாசனை வெட்டியோடி தலைமறைவாக இயங்கும் “றோ” அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது எங்ஙனம்? இப்படியாக நான் இடர்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்குத் தமிழக உள்நாட்டுப் புலனாய்வுத் துறையினரது தொடர்பு கிடைத்தது.

அப்பொழுது நாம் சென்னை நகரப் புறத்திலுள்ள “சன்தோம்” என்னுமிடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தோம்.நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிந்ததும் தமிழகப் புலனாய்வுத்துறை (கியூ பிரிவு) உதவிப்பொலிஸ் மா அதிபர் திரு. அலெக்ஸ்சாண்டர் என்னைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து ஈழத் தமிழர் பிரச்சினை பற்றியும் விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றியும் விசாரித்தார். மாறி மாறி நிகழ்ந்த சந்திப்புகள் நட்புறவாகப் பரிணமித்தன. அன்பும் பண்பும் ஆழமான அரசியற் தெளிவும் கொண்டவராக விளங்கினார் திரு. அலெக்ஸ்சாண்டர். இலங்கை அரசியல் பற்றியும் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருந்தார். இந்திய இராணுவ பயிற்சித் திட்டம் பற்றியும்; “றோ” அதிகாரிகளுக்கும் சந்திரகாசனுக்கும் இடையிலான இரகசிய உறவு பற்றியும்; எந்தெந்த அமைப்புகளுக்கு எங்கெல்லாம் பயிற்சிகள் வழங்கப் படுகிறது பற்றியும், சகல விபரங்களையும் நான் அலெக்ஸ்சாண்டர் வாயிலாக அறிந்து கொண்டேன்.


சென்னை மாநகரில் பிரபல்யமான Blue Diamond விடுதியில் ஒருமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தி அதனைத் தனது தலைமைச் செயலகமாகக் கொண்டு “றோ” அதிகாரிகளுடன் இணைந்து சந்திரகாசன் செயற்பட்டு வருகிறார் என்ற தகவலையும் அலெக்ஸ்சாண்டர் எனக்குத் தெரிவித்தார். .

அந்த விடுதியில், சந்திரகாசனின் மாடியில் தனது புலனாய்வு உளவாளி ஒருவர் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிகிறார் என்றும்; ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தி, அங்கு நடைபெறும் திருவிளையாடல்களை எல்லாம் தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சந்திரகாசனுடன் இணைந்து செயற்படும் “றோ” அதிகாரிகளில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும்; அவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே நன்று; என்றும் அலெக்ஸ்சாண்டர் அறிவுரை சொன்னார். அலெக்ஸ்சாண்டர் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் சந்திரகாசன் அப்பொழுது நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உன்னிக்கிருஷ்ணன் எனப்படும் “றோ” அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டு, இந்திய இராணுவப் பயிற்சி சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்களை,  அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏக்கு கையளித்தார்; என்று குற்றம் சுமத்தப்பட்டு நீண்ட காலக் கடூழியச் சிறையில் தள்ளப்பட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கமும், இந்திய இராணுவப் பயிற்சியையும்,  ஆயுத தளபாடங்களையும் பெற்றுக் கொள்வதன் அவசியத்தை அலெக்ஸ்சாண்டருக்கு எடுத்து விளக்கிய நான்! அதற்கான வழிமுறை பற்றியும் கேட்டேன். தமிழீழ மக்களின் நல்லாதரவு பெற்ற விடுதலை அமைப்பாக நீண்ட கால ஆயுதப் போராட்ட அனுபவத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமே களத்தில் நின்று இயங்கி வருகிறது; என்ற உண்மையைத் திருமதி. இந்திராகாந்தி அம்மையாருக்கு விபரமாக எழுதி, இந்தியாவின் இராணுவப் பயிற்சித்திட்டத்தில் புலிகளுக்கும் இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும்படியும் அலெக்ஸ்சாண்டர் ஆலோசனை வழங்கினார். திருமதி. இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றே “றோ” புலனாய்வு அமைப்பின் அதிபர் திரு.சக்சேனாவுக்கும் அனுப்பி வைக்குமாறு அவர் சொன்னார்.

அவர் கூறியபடியே திருமதி இந்திராகாந்திக்கு நான் ஒரு விபரமான கடிதம் எழுதினேன்.


அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை, கருத்தியல், போராட்ட வரலாறு என்ற ரீதியில் விளக்கத்தைக் கொடுத்து, இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் எமது இயக்கத்தை இணைத்துக் கொள்ளும் அவசியத்தையும் வலியுறுத்தினேன். அத்தோடு அக்கடிதத்தின் பிரதி ஒன்றை “றோ” அதிபர் திரு. சக்சேனாவுக்கும் அனுப்பிவைத்தேன். புது டெல்லியிலிருந்து பதில் வர நீண்ட காலம் பிடிக்கவில்லை.பாரதப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து இரண்டு வாரத்திற்குள் புது டெல்லியிலுள்ள “றோ” புலனாய்வுத்துறைத் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி என்னைச் சந்திப்பதற்காக சென்னை வந்தார். எஸ். சந்திரசேகரன் என்ற பெயருடைய அவர் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர். சென்னை நகரப்புறத்திலுள்ள விடுதி ஒன்றில் மிகவும் இரகசியமான முறையில் சந்திப்பு இடம்பெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சகல தொடர்புகளுக்கும் பெறுப்பதிகாரியாக தான் நியமிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னாரவர். முதற் சந்திப்பின்போதே விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றித் துருவி ஆராய்ந்து என்னைக் குடைந்து எடுத்தார். புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பு, ஒழுக்க விதிகள், தலைமைப்பீடம், அரசியல் கொள்கை, ஆயுதப் போராட்ட வரலாறு போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி அவர் விடுத்த கேள்விக் கணைகளின் நுட்பத்திலிருந்து திரு. சந்திரசேகரன் ஒரு ஆழமான ஆளுமையுடைய மனிதர் என்பதை உணர்ந்து கொண்டேன்.ஆயுதப் போரியல் வடிவங்கள் பற்றியும், நிறைய அறிந்து வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் ஆர்வமாக விசாரித்தார். பிரபாகரனின் ஆளுமை; அரசியல் நோக்கு; போராட்ட அனுபவம் என அவர் எழுப்பிய கேள்விகளுக்கு விபரமான பதில் அளித்தேன். 

விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக பிரபாகரனை தான் நேரில் சந்திக்க வேண்டும்! என வலியுறுத்தினார். இந்தியாவில் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி நான் கேட்டபோது; அதற்கு தான் உத்திரவாதம் அளிப்பதாகச் சொன்னார். திருமதி. இந்திராகாந்தியின் விசேட பணிப்பின்பேரில் இப்பயிற்சித் திட்டம் ஒழுங்கு செய்யப்படுவதால் பிரபாகரனின் பாதுகாப்புக்குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். இறுதியாக  நாயர் என்ற பெயருடைய அதிகாரி ஒருவரை அறிமுகம் செய்து அவர்மூலம் தன்னுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். சந்திரகாசனுக்கும், ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் தெரியாதவாறு எமது போராளிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுமெனக் கூறிய சந்திரசேகரன், விடுதலைப்  புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டியது குறித்து சந்திரகாசன் மீது புதுடில்லி அதிருப்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பின் விபரங்களை உடனடியாகவே பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தியதுடன்; எமது போராளிகளுக்கும் இந்தியாவில் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக உடனடியாகத் தமிழ் நாட்டுக்கு வருகை தருமாறும்; அவரைக் கேட்டுக்கொண்டேன். இந்தியா வருவதில் எழக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இரு மூத்த உறுப்பினர்களான மாத்தையாவையும், ரகுவையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைத்தார் பிரபாகரன்.மதுரையில் ஒரு விடுதியில் மாத்தையாவும், ரகுவும் என்னைச் சந்தித்தனர். பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பது மாத்தையாவின் கருத்து. பாண்டிபஜார் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நிபந்தனைப் பிணையிலிருந்து தமிழீழத்திற்குத் தப்பிச் சென்றவர் என்பதால்; இந்தியச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகப் பிரபாகரனை இந்திய காவல்துறையினர் கைது செய்து சிறையில் தள்ளலாம். என்பது அவரது வாதம்.


 திருமதி. இந்திராகாந்தியின் ஆசியுடன் இந்திய அரசுதான் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று கூறியும், அவர்களை நம்பச்செய்ய முடியவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி என்ற பொறிவைத்துப் புலிகளின் தலைவரை மடக்கிப் பிடிப்பதுதான் இந்திய புலனாய்வுத் துறையினரின் கபட நோக்கம் என்பது அவர்களது வாதம். இவர்களுடன் வாதிடுவதில் அர்த்தமில்லை என உணர்ந்த நான்; இந்திய நிலைமைய விரிவாக விளக்கி, இந்தியப் பயிற்சி பெறுவதாயின் கட்டாயமாக இந்தியாவுக்கு வந்தாக வேண்டு மென்றும்; பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் எழப்போவதில்லை என்றும், உறுதி கூறிப் பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி அவர்களிடம் கொடுத்தேன். இந்தியாவில் பிரபாகரனுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் அதற்கான பொறுப்பையும்; இயக்க நடவடிக்கையையும், நான்தான் ஏற்கவேண்டி வரும் என மிரட்டிவிட்டுச் சென்றார் மாத்தையா. மறுநாள் எனது கடிதம் பிரபாகரன் கையில் கிடைத்ததும், தான் விரைவில் இந்தியாவுக்கு வரவிருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார். எனது விளக்கத்திலும்; உறுதிமொழியிலும்; பிரபாகரன் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அறிந்து, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிஏற்பட்டது.

1983 அக்டோபர் மாதம் பிரபாகரனும்; அவரோடு சில மூத்த தளபதிகளும்; இந்தியா வந்தனர்.

 

பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி; அங்கு தங்கியிருந்தனர். திரு. சந்திரசேகரனும் மற்றும் சில “றோ” புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளும் பிரபாகரனைப் பாண்டிச்சேரியில் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தேன். சந்திப்பு நிகழும் நாளன்று நானும், அடேலும் இரு போராளிகளுமாக சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்குப் பயணமாகினோம். பாண்டிச்சேரியில் பிரபாகரனைச் சந்தித்து சென்னையில் நம் வந்திறங்கியதிலிருந்து நடைபெற்ற சம்பவங்களை அவரிடம் விபரமாகக் கூறினேன். அன்று நள்ளிரவு திரு. சந்திரசேகரனும்; மற்றும் சில  இந்தியப் புலனாய்வு அதிகாரிகளும்; பாண்டிச்சேரியிலுள்ள எமது வீட்டுக்கு வந்தார்கள். பிரபாகரனும், நானும், சந்திரசேகரனும் தனி அறை ஒன்றில் மந்திராலோசனை நடத்தினோம். முதற் சந்திப்பின்போதே சந்திரசேகரனுக்குப் பிரபாகரனை நன்கு பிடித்துக்கொண்டது.

இருநூறு விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்வதாகச் சந்திரசேகரன் உறுதியளித்தார்.

 

நூறுபேர் கொண்ட இரு அணிகளகப் பயிற்சி நடைபெறும் என்றும், முதல் அணியின் பயிற்சி நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் சொன்னார். புலிப் போராளிகள் சென்னையிலிருந்து டில்லி வரை புகையிரத வண்டியில் பயணம் செய்து; பின்பு டில்லியிலிருந்து இராணுவ டிரக் வண்டிகளில் உத்திரப்பிரதேச மலைப் பிராந்தியத்திலுள்ள “டெக்ராடன்” என்னுமிடத்தில் அமைந்திருக்கும்; இந்திய இராணுவப் பயிற்சிப் பாசறைக்குக் கொண்டு செல்லப்படுவர்,  என்றும் சந்திரசேகரன் விளக்கினார். முதல் அணியில் பயிற்சி பெறுவோரின் பெயர் விபரப் பட்டியலைத் தமக்குச் சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படியும் அவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டார்

தமது போராளிகளுக்கு எத்தகைய போரியற் பயிற்சி வழங்கப்படுமென்றும், எத்தகைய ஆயுதங்களைக் கையாளுவதற்கான பயிற்சி கொடுக்கப்படும் என்றும், பிரபாகரன் வினவினார். சகலவிதமான நவீன போரியல் உத்திகள்,தந்திரோபாயங்கள், பற்றிய தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி வழங்குவார்கள் என்றும், சிறுரக ஆயுதங்களிலிருந்து கனரக ஆயுதங்கள் வரை பலவிதமான ஆயுதங்களைக் கையாளுவது பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுமென்றும்; சந்திரசேகரன் விளக்கினார். நிலப்படங்கள் வரைதல், கண்ணி வெடிகளைப் புதைத்தல், வெடி பொருட்களைப் பாவித்தல், டாங்கி எதிர்ப்பு, விமான எதிர்ப்பு, ஆயுதங்களைக் கையாளுதல்; போன்றவற்றிலும் பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆயுத உதவி சம்பந்தமாகச் சந்திரசேகரன் எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. இவ் விவகாரம் குறித்துப் பின்பு பேசலாம் என்று மட்டும் சொன்னார். உத்திரப் பிரதேசத்திலுள்ள “டெக்ராடன்” இராணுவப் பயிற்சித் தளத்திற்கு வருகை தந்து விடுதலைப் புலிப்போராளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நேரடியாக  மேற்பார்வை செய்யுமாறு; அவர் பிரபாகரனுக்கு அழைப்பு விடுவித்தார் .

அடுத்த தொடரில் எம் ஜீ ஆர் அவர்களின் உதவிபற்றியும் இந்தியாவில் நடந்த பயிற்சி பற்றியும் பார்ப்போம்
தொடரும்
அன்புடன் ஈழமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 296 மட்டக்களப்பில் (Batticaloa) குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

  மட்டக்களப்பில் (Batticaloa) குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை  செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச...