ஒதியமலை படுகொலையில் கொல்லப்பட்ட 32 தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்ட 32 தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu) - ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முல்லைத்தீவு - ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 தமிழர்கள் அழைக்கப்பட்டு அரசாங்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த படுகொலை நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் நிகழ்வு நடைபெற்றுள்ளது.!
தொடர் கொலைகள்
உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
முல்லைத்தீவு - திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் உள்ள பல தமிழ்க் கிராமங்களை இலக்கு வைத்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பதினைந்து நாட்கள் இடம்பெற்ற தொடர் படுகொலைகளில் ஒதியமலை இனப்படுகொலையும் ஒன்றாகும்.
கொக்கிளாய், தென்னமரவாடி, அமராவயல், கொக்குதொடுவாய், அளம்பில், நாயாறு, குமுளமுனை, மணலாறு ஆகிய தமிழ்க் கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்த இனப்படுகொலைகளின் நோக்கம் சிங்களக் குடியேற்றமே எனவும் அப்போது நாடாளுமன்றத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
பூர்வீகக் கிராமங்கள்
நாற்பது வருடங்களாகியும் தமது பூர்வீகக் கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்தவோ, படுகொலைகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கோ நீதி கிடைக்கவில்லை என ஒதியமலை நினைவேந்தலில் கலந்து கொண்ட சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் ஜானக பெரேரா படுகொலையின் போது பிரதேசத்திற்கு கட்டளையிட்டார். தாக்குதலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு சிங்களக் குடியேற்றம் ஜானகபுர என அழைக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அனுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக