ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் ஆவண
1. மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக வாழ்கின்ற வரையறுக்கப்பட்ட பாரம்பரிய தாயக நிலப்பரப்பு.
2. மக்கள் கூட்டத்தின் வளம் பொருந்திய பொது பண்பாடு
3. மக்கள் கூட்டத்திற்கான செழுமை மிக்க பொதுமொழி.
4. மக்கள் கூட்டத்திற்கு உரித்தான பொருளாதாரக் கட்டமைப்பு அல்லது பொது பொருளாதார வாழ்வு.
5. மக்கள் கூட்டம் தம்மைத்தாமே ஆளுகின்ற அரசியல் முதிர்ச்சி.
6. சர்வதேச உறவுகளை பேணக்கூடிய அரசியல் ராஜதந்திர முதிர்ச்சி.
7. தொடர்ச்சி குன்றாத இனத்துக்கே உரித்தான வரலாறு.
மேற்குறிப்பிட்ட அடிப்படைகளை கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் கூட்டத்தையே தேசிய இனம் என உலகம் வரையறுக்கிறது. இதனை தமிழ் மக்களின் மீதும் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற தகுதிகளை பெற்றுள்ளனர். ஆயினும், அதில் சில குறைபாடுகள் இல்லாமல் இல்லை.
தமிழ்த் தேசியம்
அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலமே தமிழ்த் தேசிய இனம் தன்னைத்தானே ஆளுவதற்கான தனது விடுதலைக்கான பாதைகளை திறக்க முடியும். தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என்பதைமுதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் "குறித்த ஒரு மக்கள் கூட்டம் பிரதேசம், இனம், மொழி, மதம், பண்பாடு, வாழ்க்கைமுறை என்பனவற்றில் ஏதோ ஒரு குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் அச்சமூகத்தின் வாழ்வியல் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதர்களினதும் உள்ளார்ந்த தனித்துவ மனவுணர்வும், மனவிருப்பும், நடத்தையும் ஏற்படுத்துகின்ற மக்கள் திரட்சியினாடான சமூக ஒருமைப்பாடும் செயற்பாடுமே தேசியம்" எனப்படும்.
இங்கே ஈழத் தமிழர்கள் தமிழ் மொழி என்ற அடிப்படையிலும் தமிழ்மொழி பேசுகின்ற மக்கள் கூட்டமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியை தமது நீண்ட தொடர் வரலாற்று தாயகமாக பேணி, தற்காத்து தொடர்ந்து வாழ்கிறார்கள் என்ற அடிப்படையிலும், நம்மை ஒரு தனித்துவமான மக்கள் கூட்டமாக எண்ணத்திலும், செயலிலும், சிந்தனையிலும் தனித்துவமான அரசியல் பரிமாணத்தை கொண்டுள்ளார்கள் என்ற அடிப்படையில் அனைத்துவகை அடக்கமுறைக்கும் எதிராக ஒருமித்த அரசியல் இலக்கோடு செயல்படுவதையே தமிழ்த் தேசியம் என்கிறோம்.
தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்கின்றபோது அவர்கள் அரச உள்ளடக்கத்தை கொண்டுள்ளார்கள். ஆகவே, தேசிய இனம் என்பது மக்கள் திரளாக ஒருங்கிணைவது. அவ்வாறு திரளாக ஒருங்கிணைந்த தமிழ்த்தேசிய இனம் தன்னை அரசாக சிந்திக்கவேண்டும், தொழிற்பட வேண்டும். இந்தப் பின்னனியில் தற்போது சீரழிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியத்தை மீள்கட்டமைப்புச் செய்ய முதலில் தமிழர்கள் தேசமாகத் திரள வேண்டும்.
தேசமாக திரள வேண்டுமாயின் தமிழர்களிடம் அது விடுதலை சார்ந்து தேச நிர்மாணம் சார்ந்து அரச கட்டுமானம் சார்ந்து ஒரு முழுமைப்பட்ட பார்வையும் (On the whole outlook) அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையும் (Holistic Approach) இவற்றின் அடிப்படையில் இறைமையை மீட்பதற்கான ஒட்டுமொத்த மூலோபாயத்தை (Overall Strategy) தமிழ் அறிவியல் சமுகம் வகுக்கவேண்டியது அவசியமானது.
தமிழ்ச் சமூகத்தின் சமுதாய நடத்தைகளையோ, அரசியல் செயற்பாடுகளையோ, பண்பாட்டு விழுமியங்களையோ புரிந்து கொள்வதற்கும், அவற்றை மீள்கட்டுமானம் செய்வதற்கு சமூகம் சார்ந்திருக்கும் கட்டமைப்பைப் பற்றிப்புரிந்துகொள்ள வேண்டும்.
ஈழத்தமிழினம் தனக்குரிய கட்டமைப்புப் பகுப்பாய்வவை(structural analysis) மேற்கொள்ளவேண்டும். அதனை செயற்பாட்டு அணுகுமுறைக்கு(functional approach ஊடாக நோக்கவும் வேண்டும்.
ஈழத் தமிழினத்தின் அரசியல் தலைவியை நிர்ணயிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற அடிப்படை கட்டமைப்புக்களாவன.
1)புவியியற் கட்டமைப்பு(Geographical Structure)
2)அரசியற் கட்டமைப்பு(Political Structure)
3)பொருளியற் கட்டமைப்பு(Economic Structure)
4)சமூகக்கட்டமைப்பு(Social Structure)
5)பண்பாட்டுக் கட்டமைப்பு(Cultural Structure)
இவற்றின் அடித்தளத்தில் இருந்தே தமிழ்ச்சமூகத்தின் அரசியலை தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை கடந்து முற்றிலும் அறிவுபூர்வமாகவும், களயதார்த்தததிற்கு ஏற்றவகையிலும் தமிழ்த் தேசியவாதம் வடிவமைக்கப்பட வேண்டும்.
தமிழ் தேசிய இனத்தின் தனித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம், பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கியதோடு சமுகத்தை சார்ந்திருக்கக்கூடிய வளங்களையும், பண்பாட்டையும், அவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஆக்கத் திறன்களையும் வளர்த்து முன்னேற்றவல்ல ஒரு பாதுகாப்புகவசமாகவும், சமூக ஒருமைப்பாட்டையும், ஆளுமை விருத்தியையும் சமூக பொருளாதார மேன்மையையும் ஈட்டவல்ல ஒருவழிமுறையாகவும் அனைத்துவகை ஆதிக்கங்களையும் எதிர்த்து அரசியலில் மக்களை சமபங்காளியாக்கி ஜனநாயகத்தின் காவு வாகனமாகவும், அனைத்துவகை சமுக முன்னேற்றத்திற்குமான ஒரு கோட்பாட்டு நடைமுறையாக “தமிழ்த்தேசியவாதத்தை“ கட்டமைப்புச் செய்தன் மூலம் ஈழத் தமிழர் தேசமாக திரளவேண்டும்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசிய இனத்திற்கான அனைத்து தகைமைகளையும் அந்தக் காலகட்டத்தில் கொண்டிருந்தது மாத்திரமல்ல. அது அரசாக சிந்திக்கவும் செயற்படவும் நடைமுறை அரசை ஸ்தாபித்துக் காட்டியது ஆயினும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் தேசிய இனத்தின் அரச கட்டுமானம் அழித்தொழிக்கப்பட்டு விட்டது.
இத்தகைய பின்னணியில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தேசமாக திரண்டு அரசாக சிந்திக்க தவறிவிட்டனர். கடந்த கால தவறான, பிழையான சிந்தனைக்கும், பார்வைக்கும் முடிவு கட்டி 'தேசமாகத் திரண்டு அரசாகச் சிந்திப்போம்' என்ற ஒரு புதிய சிந்தனைக்கும், பார்வைக்கும், செயலுக்கும் செல்லாமல் தமிழினம் வெற்றிப்பாதையை நோக்கி முன்னேற முடியாது. தேசிய இனத்தின் விடுதலை என்பது தேசமாக திரண்டு எழுந்தால் மாத்திரம் போதாது. தமிழர்கள் தமது விடுதலையை சாத்தியப்படுத்த அரசாக சிந்திக்க வேண்டும், அரசாக தொழிற்பட வேண்டும், அரசுக்குரிய கட்டுமானங்களை கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
அரசு என்பது ஒரு உயிரி என்கிறார்கள். அரசு என்பது ஒரு இயந்திரம் என்கிறார்கள். அரசு ஒரு நிறுவனம் என்கிறது அரசறிவியல். உண்மையில் அரசு இயந்திரமாகவும், உயிரியாகவும், நிறுவனமாகவும் தொழிற்படுகிறது.
ஆகவே அரசுக்கு இதயமும் இல்லை, நீதி நியாயங்களும் இல்லை, அதற்கு வெட்கமும் கிடையாது, அத்தகைய அரசு எப்போதும் தன்னை பாதுகாப்பதிலேயே அது கவனம் செலுத்தும். அரசு என்ற சக்கரத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட இரும்புச் சட்டம் வாள், அரசு என்கின்ற அந்த சக்கரத்தை யார் முட்டினாலும் அது தயவு தாட்சனை இன்றி வெட்டி வீழ்த்தும். அரசு என்கின்ற இயந்திரத்துக்கு உயிருக்கு இருக்கின்றதான சூழலுக்கு ஏற்ப செயல்படுகின்ற இயல்பும் உண்டு. அரசு என்ற உயிருள்ள நிறுவனம் நிலம், மக்கள், அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த நான்கில் ஏதேனும் ஒன்று இல்லாவிடில் அரசு உயிர் வாழ முடியாது. அரசு என்கின்ற போது அரசுக்கு உரித்தான நிலத்திற்குள் வாழ்கின்ற மக்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் மட்டற்ற அதிகாரத்தைக் கொண்டு கட்டுப்படுத்துகின்ற, நிர்வகிக்கின்ற, ஒழுங்குபடுத்துகின்ற நிறுவனமாகும். இந்த அரசு என்ற நிறுவனம் தன்னை தற்காத்துக் கொண்டு அதிகாரம் செலுத்துவதற்கு அரசாங்கம் என்ற கட்டமைப்பை கட்டமைப்புச் செய்துள்ளது.
அந்த அரசாங்கம் தனது செயற்பாட்டை சட்டம், நீதி, நிர்வாகம் என்ற முப்பிரிவுகளாகப் பிரித்து தனக்கே உரித்தான இறைமையை அது மக்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் பிரயேகிக்கிறது. ஆயினும் ஒரு வரையறுக்கப்பட்ட நிலமின்றி அரசு இயங்க முடியாது. ஆயினும் அரசு என்ற உயிருள்ள நிறுவனத்தில் தலையாயது மக்கள். மக்களின்றி ஒரு அரசு இருக்க முடியாது, இயங்க முடியாது.
ஆனால் ஏனையவைகளான நிலம், அரசாங்கம், இறைமை ஆகியவை இழக்கப்பட்டால் மக்கள் என்ற உயிரி அவற்றை பெறுவதற்கு அல்லது கட்டமைப்பைச் செய்வதற்கு முனையும். மக்கள் திரள் அரசு என்கின்ற நிறுவனத்தின் நிலம், அரசாங்கம், இறைமை ஆகியவற்றை மீள்நிர்மாணம் செய்ய முடியும். இதற்கு உதாரணம் யூதர்கள் இழந்த நிலத்தையும் அரசையும் இறைமையும் 2000 வருடங்களுக்கு பின்னர் மீட்டெடுத்தனர் என்ற வரலாற்று உதாரணம் இந்தப் பூமியில் உண்டு.
ஈழத் தமிழர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அரசை இழந்து விட்டார்கள். அரசை இழந்ததனால் இறமையையும் இழந்து விட்டார்கள். ஆயினும் பாரம்பரிய தாயகத்தில் தொடர்ந்து வாழ்கிறார்கள். ஆகவே நிலமும் மக்களும் கொண்ட ஈழத் தமிழர்கள் தமது அரசை மீட்பதிலும் இறைமையை பிரயோகிப்பதிலும் முற்றிலும் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். முதலில் மக்களையும், நிலத்தையும் பாதுகாக்க வேண்டும்.
விடுதலைக்கான பயணம்
இந்நிலையிலிருந்துதான் விடுதலைக்கான பயணத்தை தொடர முடியும். இப்போது தமிழ் மக்கள் அரசாக சிந்திக்கவும் தொழிற்படவும் தயாராக வேண்டும். அதற்கான கட்டுமானங்களை கட்டமைப்புச் செய்ய வேண்டும். அரசு என்ற கட்டமைப்பு தன்னைத்தானே இயல்பாகத் தற்காத்துக் கொள்ளும் தனக்கான தேவைகளை அது வெட்கம் இன்றி பூர்த்தி செய்யும், வளைந்து கொடுக்கும், நிமிர்ந்து நிற்கும், தயவு தாட்சனை இன்றி தண்டிக்கும். தனக்கு தீங்கான எதனையும் தன்னுள் விட்டு வைக்காது. அருகில் அணுகுகின்ற போதே அதனை அழித்துவிடும். ஆயினும் இத்தகைய அரசுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்க மையம் ஒன்று இருக்க வேண்டும்.
அல்லது ஒரு கட்டளை பிறப்பிக்கும் நபர் இருக்க வேண்டும். அந்த நபர் எத்தகைய குறைபாடுடையவராகவும் இருக்கலாம். அந்த நபரை அரச கட்டுமானம் தனது இடுக்கு பிடிக்குள்ளாலேயே வழிநடத்தும். ஆகவே கட்டளை பீடம் என்ற இடைவெளியை நிரப்பினால் அரசு என்ற நிறுவனம் தன்னியல்பாக தொழிற்படுவதற்கு ஏற்றவாறே கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் செயற்பாட்டிற்கு அரசாக சிந்திப்பது மிக அவசியமானது.
அரசு எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும், கற்பனைகளையும், அதி தீவிர இலட்சிய வாதங்களையும் கடந்து நடைமுறையோடு ஒத்திசைந்து செயற்படும் உயிருள்ள நிறுவனம். அது தன்னையும் தன்னைச் சார்ந்திருப்பவரையும் எப்போதும் எல்லா சந்தர்ப்பத்திலும் பாதுகாக்கும். தமிழினம் அரசாகச் சிந்திப்பது என்பது நடைமுறையுடன் எல்லாவற்றையும் பார்ப்பது என்பதுதான். அரசாக சிந்திப்பதனால் மட்டுமே தமிழினம் தன்னையும் தன்னைச் சார்ந்த ஏனைய கட்டுமானங்களையும் தற்காத்துக் கொள்ள முடியும்.
அரசு தன்னை தற்காத்துக் கொள்வது போல தமிழ் மக்களும் தம்மை அரசாக சிந்திப்பதன் மூலமும் செயற்படுவதன் மூலமே தற்காத்துக் கொள்ள முடியும்.
இன்றைய உலகில் 196 நாடுகள் சுயாதீனமான அரசை கொண்டுள்ளன. அந்த அரசுகளுடன் தமிழ் மக்கள் ராஜரீக தொடர்புகளை பேணுவதற்கு அரசாக சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் மாத்திரமே ஈழத் தமிழர்களுக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியும். ஒரு வரையப்பட்ட வெளியுறவு கொள்கையை கொண்டிருந்தால் மாத்திரமே அதன் அடிப்படையில் சர்வதேச நாடுகளுடன் உறவை வளர்க்க முடியும்.
சிங்கம் காட்டு ராஜாவாயினும் அது தனித்து நின்றால் பலமற்றதுவே. கூட்டுத்தான் அதனை வீரத்தின் சிகரமாக காட்டு ராஜாவாக தொடர்ந்து நிலைநிறுத்த உதவுகிறது. இது தமிழர்களுடைய அரசியலுக்கும் பொருந்தும். கூட்டுக்கள் சேராமல், அணிகள் சேராமல், நட்பு நாடுகளை திரட்டாமல் தனித்து நின்று இந்த பூமிப் பந்தில் எந்த அரசும் நிலைத்திட முடியாது. அவ்வாறே தேசிய இனங்களும் கூட்டுச் சேராமல் தம்மை தேசமாக திரட்டி ஒன்றுபட்டு நிற்காமல் நிலைக்க முடியாது. தமிழர்களும் தனித்து நின்று எதனையும் சாதித்திட முடியாது. சிங்கத்துக்கு மான் மாலையிடுவதனால் சிங்கம் மானைவிட்டு வைக்கப் போவதில்லை.
சிங்கத்துக்கு பசி எடுக்கின்ற போது மானை வேட்டையாடுவது இயல்பு. இங்கே மான் சிங்கத்தின் வேட்டையாடும் தொழிலை இலகுபடுத்துகிறது. மான் சிங்கத்தைக் கண்டால் ஓடிவிட வேண்டும். இது அரசுக்கும் பொருந்தும், அரசாக வேண்டிய தேசிய இனங்களுக்கும் பொருந்தும். அரசுகள் சுயநலமானவை. அந்தந்த சுயநலங்களுக்குள் எமக்கு பொருத்தமானவை எவையோ அவற்றுடன் ஒத்துப் போகவும், அவற்றைக் கையாளவும் தமிழர்கள் தயாராக வேண்டும்.
தமிழ் மக்கள்
பரஸ்பரம் நலன்களே முக்கியத்துவம் பெறுகின்றன. பரஸ்பர நலன்களின் அடிப்படையில் உறவுகள் மலர்கின்றன. அதனை தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அரச இயந்திரம் என்பது கூரிய வாளைக் கொண்டது. அது எப்போதும் இரத்தத்தை உறிஞ்சும். அது எப்போதும் பலப் பிரியோகத்தையே மேற்கொள்ளும். இத்தகைய இயல்பான உலகளாவிய அரச இயந்திரங்களை புரிந்து கொண்டு அந்த இயந்திரங்களின் கொடுவாளுக்குள் அகப்படாமல் அந்த வாள்களுக்கு இடையேயான இடைவெளிகளுக்குள் புகுந்தும் நுழைந்தும் செயற்படுவதுதான் அரசியல் இராஜதந்திரம். அதுவே பன்னாட்டு அரசியல்.
அந்தப் பன்னாட்டு அரசியலை அரச இயந்திரம் என்ற நிலைப்பாட்டில் அரசாகத் தமிழ் மக்கள் சிந்தித்தால் மாத்திரமே சர்வதேச அரசியலை கையாள முடியும். இங்கே அரசுக்கு இதயம் இல்லை, அதற்கு ஆடையுமில்லை. ஆதலால் வெட்கமும் இல்லை. அதனிடம் எந்த நீதி நியாயங்களும் தர்மங்களும் கிடையாது. முற்றிலும் தான் சார்ந்தும், தன்நலன் சார்ந்துமே அரசு தொழிற்படும். அந்த அரசு சிந்தனை தமிழ் மக்களுக்கு தேவையாகவுள்ளது.
தூய இலட்சிய வாதங்களும், கற்பனவாத காப்பிய கதாபாத்திரங்களும் இலக்கியங்களுக்கு கவர்ச்சியாய் இருக்கலாம். அவை படிப்பதற்கு ரம்மியமாக தோன்றலாம், கற்பனையில் சஞ்சரித்து, சஞ்சரித்து மகிழ உதவலாம், அவை குறுங்கால மனமகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
ஆனால் நடைமுறையில் அவை எதற்கும் பயன்படாது. இவை அரசுக்குப் பொருந்தாது, ஒத்து வராது. அரசு இத்தகைய எந்த மாயைக்குள்ளும் அகப்படாது, மூழ்காது. அவ்வாறே தமிழர்களும் தொழிற்பட வேண்டும்.
இத்தகைய அரச கட்டுமானத்தை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தம்மை ஒரு அரசாக சிந்திக்க முனைந்தால் கற்பனைகளையும், தூய இலட்சிய வாதங்களையும், உதறித்தள்ளி கற்பனை உலகைக் கடந்து விடுவர். குழந்தைக்கு கண்ணாடியில் அம்புலிமாமா காட்டி ஏமாற்றி சோறு ஊட்டுவது போல அரசாக தமிழ் மக்கள் தம்மை சிந்திக்கத் தொடங்கினால் மாயையான வீரதீர காப்பிய கற்பனைகளும் தூய இலட்சிய வாதங்களும் தமிழ் மக்களிடமிருந்து நீங்கிவிடும்.
முற்றிலும் அறிவுபூர்வமான வீரமும் நேர்மையும் அறிவும் செயற்பட முனைந்தால் மாத்திரமே தமிழ் தேசிய இனம் தனது கடந்தகால தவறான, பிழையான சிந்தனைக்கும், பார்வைக்கும் முடிவு கட்டி 'தேசமாகத் திரண்டு அரசாச் சிந்திப்போம்' என்ற ஒரு புதிய சிந்தனைக்கும், பார்வைக்கும், செயலுக்கும் செல்லாமல் தமிழினம் வெற்றிப் பாதையை நோக்கி முன்னேற முடியாது. இறைமையை மீட்டெடுக்க முடியாது.
முள்ளிவாய்க்கால் வரை ஈழத்தமிழர்களிடம் ஓர் அரை அரசு இருந்தது. ஆனால் முள்ளிவாய்க்காலுடன் அந்த அரை அரசும் இல்லாத நிலையில் கற்பனை வெள்ளை யானைகளுக்கு வெள்ளைச்சிறகு கட்டி அண்ட வெளியிற் பறக்கவிடும் கற்பனைகளைப் பார்த்து தமிழினம் மல்லாலாந்து வீழும் அவலத்தை எட்டக் கூடாது.