கடற்கரும்புலி
கப்டன் வாமன்(தூயமணி)
கந்தசாமி ரவிநாயகம்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு:22.08.1971
வீரச்சாவு:19.09.1994
நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு
நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது.
வாமன்! அவனொரு நல்ல மனிதன். அதற்கு அப்பால், எங்களுக்கு ஒரு அற்புதமான நண்பன்.
தனித்த சிலரோடு மட்டுமல்லாமல், பறந்து எல்லோரோடுமே நட்பைப் பேணிய ஒரு சிறந்த பண்பாளன்.
கூட இருந்த அத்தனை பேரிலுமே அன்பு கொண்டிருந்த அதே நேரத்தில், அக்கறையாகவும் இருந்த உற்றதோழன்.
எந்த நேரமும், ஏதோ ஒரு வகையில் தன்னால் இயன்ற அளவுக்கு எங்களுக்கு உதவிகால் செய்துகொண்டெயிருந்த துணைவன்.
எங்கிருந்து என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும், கடைசியில் அவன் முடிக்கும் இடங்கள் எப்போதும் இரண்டு விடயங்களைத் தொனிப்போருளாகக் கொண்டிருக்கும்.
ஒன்று, எங்களை நல்வழிப்படுத்துகிற விதமான நல்ல புத்திமதிகள், அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள்.
அடுத்தது, கரும்புலித் தாக்குதல்கள்; இலக்குகள்; வழிமுறைகள்; உத்திகள்.
“நல்லத்தான ஒரு வாழ்வைத் தந்தருள்க!” என்று கடவுளிடம் மன்றாடித் திரியும் எங்கள் சமூக வாழ்வியக்கத்துக்குள்ளிருந்துதான் அவனும் புறப்பட்டான்.
ஆனால், “நல்லத்தான ஒரு சாவைத் தந்தருள்கள்!” என்றுதான், இறைவனின் சன்னிதானங்களில் அவன் இறந்து வேண்டிக்கொண்டுதிரிந்தான்.
ஒரு கரும்புலித் தாக்குதல் வாமனின் கனவு!
ஒரு கரும்புலித் தாக்குதலே வாமனது நினைவு!
பகைவனின் நெற்றியில் வெடிக்கும் ஒரு தாகத்தைத் தாங்கியே அவனது சொல், செயல், சிந்திப்பு எல்லாமே.
தளபதிக்கு அலுப்புக் கொடுத்துக் கொடுஹ்து. ஒருவழியாக அந்த வாய்ப்பைப் பெற்றபோதும், அவனுக்குரிய சர்ந்தப்பம் சரிப்பட்டு வராமல் இழுபட்டுக்கொண்டே போனபோதுதான்,
கடவுளின் திருப்பாதங்களில்கூட போய் விழுந்து வேண்டத் துவங்கினானாம்.
சாவும், அழிவும், பட்டினியும், துயரமும் நாளாந்த வாழ்வாகிப்போன தமிழீழத்தின் தென் பிராந்தியத்திலிருந்து, இழப்புக்களால் உரமேறி வந்தவன்தான் அவன்!
அதனால்தானாக்கும், அப்படி ஒரு சுதந்திர வேட்கை அவனுக்குள் இருக்கின்றது.
இந்தியர் காலம், எங்கள் போராட்ட வரலாற்றின் இருண்ட பதிவு.
அதுவரை, தானுண்டு, தன் வீடுண்டு என இருந்தவன் அதன் பிறகு, தனக்கென ஒரு நாடும் உண்டு என்று புலியாய் வந்தான்.
இருபதாண்டுகளுக்கு முன்னாள் ஒரு இரவு. (1994ம் ஆண்டு எழுதப்பட்டது தற்சமயம் தேசக்காற்று வரலாற்றுடன் இன்று…)
கோயில் போரதீவு கிராமத்தில் ஒரு சின்னக் குடிசை.
தொட்டிலில் ஆடி, “குவா குவா” சத்தத்தோடு கண் சிமிட்டினான் அந்தக் குழந்தை. ரவிக்குமார் ஆசையாக அவர்கள் இட்ட திருநாமம்.
அப்பா கந்தசாமி; அம்மா யோகம்மா.
வீட்டில், பூர்வீகச் சொத்து என்று சொல்ல அவர்களிடம் இருந்தது, வறுமை ஒன்றுதான்.
பாவம். தன்னந்தனியாக எல்லாப் பாரங்களையும் தலையில் சுமந்தார் தந்தை.
தாயின் மடியில் அழகாய்ச் சிரித்த அந்தக் குழந்தை, தாயக மடியில் தவழ்ந்து, விழுந்து விழுந்து, எழுந்து நிமிர்ந்து உயர்ந்தபோது, சலசலத்து ஓடும் அந்த எழிலான அருவிகளில் குதித்து நீரடிமகிழ, அவனுக்கு நேரமிருக்கவில்லை.
பள்ளிக்கு நடந்த பிஞ்சுப் பாதங்கள், மீதி நேரங்களில், வயலுக்கு நடக்கவேண்டியிருந்தது. சின்னப் பையன் மாடாய் உழைத்தான்.
வரம்புகளுக்குள்ளே, வியர்வைச் சகதியில் வறுமை மூழ்க. மெல்ல மெல்ல அவர்கள் உய்யத் துவங்கினார்கள்.
இந்திய நெருக்கடி; அடிவருடிகளின் அனர்த்தங்கள்: நிம்மதி இழந்துபோன வாழ்வு.
திடிரென, அந்தக் கிராமத்திலிருந்து கொஞ்சம் இளையோரைக் காணவில்லை.
மூதூரின் அடர்ந்த காடு.
நெடித்துச் சடைத்த, தடித்த மரங்களின் கீழ் அவர்கள் களைத்தார்கள்.
இந்தியர்கள் வளைத்துத் தாக்குயபோதும், இடம்மாறி இடம்மாறி அதற்குள்ளேயே.
ஓடி…… கயிறேறி…….. மூடை தூக்கி……., சயிட்றோளில் வாந்தியெடுத்து, ‘குறோள்’ இழுத்துப் பயந்து முழங்கையில் ரத்தம் ஒழுக ஒழுக அணிவகுத்து…. அணி நடந்து…. புலிக்கொடியின் கிழ் உறுதிப் பிரமாணம் எடுத்து………
சீரான உணவில்லை, ஒழுங்கான உறக்கமில்லை, தேவியான உடையில்லை, நோயிற்கு மருந்தில்லை, நிலையாக ஒரு இடமுமில்லை…………….., ஆனாலும் ஓயாத பயிற்சி.
முடிந்தபோது, தளராத புலிகளாகக் களமாடத் தயாராக உருவாகியிருந்தனர் அவர்கள்.
ரி. 56 உம் கையுமாக வெளியில் வந்தான் வாமன்.
மண்டூர் அவனது முதற்களம். இரும்புப் பாலத்தடியில் ஒரு பதுங்கித் தாக்குதல். இலக்கு, இந்திய வல்லரசின் ஒரு தரைப்படை ரோந்து அணி.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த சேனாதிபதிகளில் ஒருவரும், தென் பிராந்தியத் துணைத் தளபதியுமான லெப்ரினன் கேணல் றீகன், களத்தில் நின்று வழிநடாத்திய அதிரடி.
நடு வீதியில், 30 இந்தியச் சிப்பாய்கள் பிணங்களாய்ச் சுருண்டார்கள்.
தென் தமிழீழத்தின் நிகழ்வுகள் பற்றித்தான், எப்போதும் அந்த மைந்தனுக்குப் பெரிய கவலைகள்.
கடற்கரை மணலில் நடந்த கால் நனைக்கிறபோது, பக்கத்தில் நடந்து கதைகள் சொல்வான்; சண்டைப் படகின் இயந்திரத்தைப் பழுது பார்கிறபோது, அருகில் அமர்ந்து சோகம் சொல்லுவான். ‘பிப்ரி கலிபரை’ கழற்றித் துப்பரவு செய்கிறபோது, கூட இருந்து துயரம் விபரிப்பான்.
சிதைந்தழிந்துபோய்க் கிடக்கும் எங்கள் மண்ணின் அந்த இன்னொரு துருவத்தை கண்களுக்கு முன்னாள் அவன் விபரிப்பான்.
உயிருக்குள் இரத்தம் வடியும்.
“அந்தச் சனங்கள் பாவம் மச்சான்” எனும்போது……. அவனைப் பார்க்கப் பாவமாய் இருக்கும்.
“அங்கயும் நாங்கள் கரும்புலித் தாக்குதல்களைச் செய்யவேண்டும்; அப்பத்தான் சிங்களவனைக் கலைக்கலாம்.” அவனுக்குள் அது பெரியதொரு ஆசை வேட்கை.
சுகயீனமாக மருத்துவமனையில் படுத்திருந்தவனுக்கு, பூநகரி அடிக்கும் சேதியை சொன்னான் பார்க்கப்போன ஒரு நண்பன்.
துள்ளிக் குதித்துக் கொண்டு முகாமிற்கு அன்றே வந்து சேர்ந்துவிட்டான் வாமன்.
‘ஒப்பரேசன் தவளை’ பாசறையில் படையெடுப்புக்கான தயார்படுத்தல்.
தளபதி குழுக்களை ஒழுங்குபடுத்தியபோது, அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தவன், தாக்குதல் அணி எதிலும் தான் செர்க்கப்படாததைக் கண்டதும் இடையில் புகுந்து சண்டை பிடித்தான்.
“தம்பி உனக்கு ஏலாதெண்……” சொல்லி முடிக்க விடாமல் கரைச்சல் தந்தான்.
ஆய்க்கினை தாங்க முடியாமல் அவனையும் ஒரு அணியோடு இணைத்தார் தளபதி.
கனரக ஆயுதப்பிரிவில் அவன். பயிற்சிகள் மாதிரி உரு இலக்கை அவனது ‘லோ’ அடி, இம்மியும் பிசகாமல் நொறுங்கியபோது, தலைவர் தோள்களில் தட்டி வாழ்த்தினார்.
இனம் புரியாத தெம்பு. சரித்திரத்தில் புகழ்பெற்ற அந்த நாள்.
நாகதேவன்துறை நோக்கிய ஒரு நீருடகத் தாக்குதலனியில் வாமன்.
அந்த வரலாற்றுச் சிறப்பான நிலத்தை நோக்கி, எங்கள் வரலாற்றுப் பெருமைமிக்க படையெடுப்பு.
72 மணி நேரத்தின் பின் அங்கிருந்து நாங்கள் வெளியேறிகொண்டிருந்தபோது , உலகம் பூநகரி பற்றியும் புலிகளைப் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தது.
வந்ததன் பின்னர்தான் கரும்புலித் தாக்குதலுக்கான அவனது நச்சரிப்பு உச்சநிலை அடைந்தது.
அண்மைக்காலம். அவன் தாக்குதலுக்காகக் காத்திருந்த நாட்கள்.
“இனி என்ன மச்சான் பேச்சுவார்த்தை துவங்கப் போகுது, சமாதானம் வரப்போகுது, உனக்கு இடக்க சர்ந்தப்பம் கிடைக்காது…………..”
நாங்கள் சுற்றிவர இருந்து அவனைக் கிண்டல் செய்வோம்.
“ஐயோ மச்சான் அப்படியெல்லாம் சொல்லாதேங்கோடா, என்னால தாங்க்கேளது” உண்மையிலேயே வேதனைப்பட்டான்.
குலுக்கல் முறையில் தெரிவாகிய கரும்புலி வீரர்களுக்குள்ளும் அவன் எடுபடவில்லை. அந்த நேரத்தில் அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
காலில் விழா குறையாக கெஞ்சினான்; தானே தான் இடிக்கவேண்டும் எனத் தளபதியிடம் வேண்டினான்.
அவர்களில் யாருக்குத்தான் மனமில்லை; எல்லோரும் முரண்டு பிடித்தார்கள்; அத்தனை பெரும் “நானே” என்று நின்றார்கள்.
இந்த அபூர்வம், பூலோகத்தில் புலிகளிடம் மட்டுமே காணக்கூடிய ஆச்சரியம்.
பிரபாகரனின் பிள்ளைகளிடம் மட்டுமே பார்க்கக்கூடிய அதீத தேசப்பற்றின் வெளிப்பாடு.
இறுதியில்………….,
தளபதியில் சொல்லுக்கிணங்க அவனுக்காக விட்டுக்கொடுத்து மற்றவர்கள் ஒதுங்கினார்கள்.
கடற்புலிகளுக்கு வாமன் வந்த புதிதில், நீந்துவதிளிருந்து, படகோட்டுவதிலிருந்து, அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது லக்ஸ்மன்தான்.
– விடுதலைப்புலிகள் இதழ்